
புதுச்சேரியை பாஜக ஆட்டிப்படைக்கிறது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெறுவதை போல, புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி புதுச்சேரியில் இன்று (ஏப்ரல் 6) பரப்புரையில் ஈடுபட்டார்.புதுச்சேரியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அவர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த பரப்புரையின் போது ராகுல் காந்தி பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்படும். அரசு மற்றும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அரசு பணியில் சேர்வதற்கான வயது வரம்பு 40 ஆக உயர்த்தப்படும். பெண்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்படும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த 6 மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.20 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்”. என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “புதுச்சேரிக்கு வருவது எப்போதும் மகிழ்ச்சியான அனுபவத்தைக் கொடுக்கும். நான் அடிக்கடி இங்கு வருவதற்கு ஆசைப்படுகிறேன். அதற்கு உங்கள் அன்பும், நட்பும்தான் காரணம். புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரியை ஆட்சி செய்யவில்லை. எங்கேயோ இருந்து இங்கு ஆட்சி செய்கின்றனர். புதுச்சேரியை பாஜக ஆட்டிப்படைக்கிறது. அவர்களின் சித்தாந்தம் இங்கு திணிக்கப்படுகிறது.புதுச்சேரியில் ஒவ்வொரு அரசு ஒப்பந்தத்திற்கும் 30 சதவீதம் கமிஷன் பெறப்படுகிறது.
போலி மருந்து விவகாரத்தில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளிகளுக்கு அருகே மதுபானக் கூடங்கள் தொடங்கப்படுகின்றன. கோயிலுக்கு சொந்தமான இடங்களை விற்று வருகிறார்கள். புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மாநில அந்தஸ்து உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.



