
புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு மளிகைப் பொருட்களுக்கான டோக்கன் விநியோகம் செய்யப்பட்டதாக திமுக புகார் கூறியுள்ளது.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 9) காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. புதுச்சேரியில் காலை 9.00 மணி நிலவரப்படி 17.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், பாகூர் பகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சினர் வாக்காளர்களுக்கு மளிகைப் பொருட்களுக்கான டோக்கன்களை விநியோகம் செய்வதாக திமுகவினருக்கு தகவல் கிடைத்தது. இதனால் திமுக வேட்பாளரின் ஆதரவாளர்கள் அங்கு சென்ற போது என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் தப்பியோட ஆரம்பித்தனர்.
அப்போது அவர்கள் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் தங்களிடமிருந்த டோக்கன்களை கீழே வீசி எறிந்துவிட்டு தப்பிச் சென்றனர். ரூ.1,500 ரூபாய் மதிப்புள்ள பொருட்களுக்கான அந்த டோக்கன்களை என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் விநியோகம் செய்ததாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினரிடம் திமுகவினர் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் பாகூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



