
சென்னையில் மூன்று தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோர் மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நடிகரும், தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவருமான விஜய், இந்த தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். அத்துடன் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். திருப்பூரில் விஜய் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில், சென்னையில் விஜய் இன்று (ஏப்ரல் 15) பிரச்சாரம் செய்கிறார். தேர்தல் ஆணைய நிபந்தனைகளுடன் சென்னை தியாகராயநகர், ஆயிரம் விளக்கு மற்றும் எழும்பூர் (தனி) ஆகிய தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.



