மே 4-க்குப் பிறகு எடப்பாடி தான் முதலமைச்சர்… அண்ணாமலை நம்பிக்கை

மே 4-ம் தேதிக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்று அண்ணாமலை கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று (ஏப்ரல் 17) பிரசாரம் செய்தார். அப்போது ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அண்ணாமலை அளித்த பேட்டியில், ” திமுக ஆட்சிக்கு வருவதை மக்கள் விரும்பவில்லை. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

வருகிற மே 4-ம் தேதிக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் முதலமைச்சராக வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். மக்களின் அன்பு மற்றும் ஆசீர்வாதத்துடன், தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம். தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை திமுக ஏன் எதிர்க்கிறது என்பது எங்களுக்குப் புரியவில்லை.

தென்னிந்திய மாநிலங்கள், இந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு முன்பு 543 இடங்களில் சுமார் 23.7 சதவீத பங்களிப்பைக் கொண்டிருந்தன. அதிகரிப்புக்குப் பிறகு, நாம் 23.9 சதவீத பங்களிப்பைப் பெறப்போகிறோம். இது சிறிய உயர்வு தான். நாம் இடங்களை இழக்கவில்லை. 33 சதவீத இடஒதுக்கீடு மூலம் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் நாடாளுமன்றத்திற்குச் செல்லப் போகிறார்கள். நேற்று நடந்தது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டத்தொடர். அதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டனர். திமுக தலைவரைத் தவிர வேறு யாரும் தங்கள் வீட்டில் நேற்று கருப்புக் கொடி ஏற்றவில்லை” என்று தெரிவித்தார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *