
பெரம்பூர், கடலூரில் நடைபெற இருந்த தேர்தல் பிரசாரத்தை விஜய் ரத்து செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்த கடந்த 30-ம் தேதி பெரம்பூர் தொகுதியில் விஜய் பிரசாரம் செய்திருந்தார். இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 18) பெரம்பூரில் அவர் வீடு, வீடாக வாக்குசேகரிக்க முடிவு செய்திருந்தார். இதற்கு காவல்துறை அனுமதி வழங்கியிருந்தது. இந்த நிலையில், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் பிரசாரத்தை விஜய் ரத்து செய்துள்ளார்.
இதுகுறித்து தமிழக வெற்றிக்கழகம் தரப்பில், பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள மாலை அனுமதி வேண்டி காவல் துறையினரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் மாலைக்கு பதிலாக காலையில் அனுமதி கொடுத்ததன் காரணமாக இந்த பிரச்சாரம் ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கடலூரில் நாளை (ஏப்ரல் 19) நடைபெற இருந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பரப்புரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ரோடு ஷோவிற்கு அனுமதி மறுக்கப்பட்ட உள்ளதால் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே விஜய்யின் தேர்தல் பிரசாரத்தில் குளறுபடி ஏற்பட்டு வந்த நிலையில் பெரம்பூர், கடலூர் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளது தவெகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



