மதுரை நம்பியைத் தெரியும், தமிழ் நம்பியைத் தெரியுமா?

மதுரை சக்ஸஸ் துணிக்கடை அருகே இருந்த மிக்சர் கடையில் குழந்தைகளுக்கு நேந்திரம் சிப்ஸ் உள்ளிட்ட தின்பண்டங்களை வாங்கிக் கொண்டிருந்தேன். அப்போது யாரோ முதுகைத் தட்டுவது போல் இருந்தது. திரும்பிப் பார்த்தால் ராஜேந்திரன் நின்று கொண்டிருந்தார். ” என்னது அதிசயமாக இந்த பக்கம்” என்று நான் கேட்டேன். அவரைப் பார்த்து பதினைந்து வருடங்களுக்கு மேலிருக்கும். அந்த மிக்சர் கடைக்கு அடுத்த கடையைக் காட்டினார். திறப்பு விழாவிற்கு தயாராகிக் கொண்டிருந்த டெய்லர் கடை அது. ” என்னன்ணே இங்க கடை திறக்கப் போறீங்களா?” என்று ஆச்சரியமாய் கேட்டவுடன், “ஆமாம்” என்றார்.

மதுரை கோ.புதூரில் ஒரு காலத்தில் கொடிகட்டிடப் பறந்த டெய்லர் அவர். புதூரில் உள்ள டெண்ட் கொட்டகையில் இடைவேளையின் போது சிலைடு போடுவார்கள். புதூரைச் சேர்ந்த சிக் டெய்லர், நியூ சைக்கோன், எக்ஸ்பர்ட் கடையோடு ஆர்.டெக்ஸ் டெய்லர் என்ற பெயரில் ராஜேந்திரனின் கடை சிலைடுகள் காட்டப்படும். அந்த காலத்தில் ரெடிமேட் உடை பெரும்பாலும் யாரும் தைப்பதில்லை. பொங்கல், தீபாவளி வந்து விட்டால், இந்த டெய்லர் கடைகளில் கூட்டம் அலைமோதும். தங்கள் விருப்பமான நடிகர்களைப் போல உடை அணிவதில் அன்றைய இளைஞர்களிடையே ஆர்வம் இருந்தது.
ஆர்.டெக்ஸ் என்ற பெயரில் புதூர் மார்க்கெட் எதிரே ராஜேந்திரன் கடை வைத்திருந்தார். கடைசியில் ஒரு தையல் மிஷின் தான் இருக்கும். அந்த அளவு சின்னக்கடை. ஆனால், மார்க்கெட் அருகில் இருக்கும் பெரிய பில்டிங்கின் இரண்டாவது மாடியில் ஐந்து தையல் மிஷின்களைக் கொண்டு அவர் கடை நடத்தி வந்தார். தீபாவளி காலமென்றால், அவரது கடையில் அவ்வளவு கூட்டமிருக்கும். நடிகர் கமல்ஹாசன் விக்ரம்’ படத்தில் ‘பெர்பெக்ட்’ என்ற வார்த்தைகளைக் கொண்ட சட்டை போட்டிருப்பார். அதே போல துணியை வாங்கிக் கொண்டு வந்து நிறைய பேர் சட்டை பை வைக்கும் இடத்தில் பெர்பெக்ட் வருமாறு தைக்க வேண்டும் என்று கமல்ஹாசன் படத்தை காட்டி தைக்கச் சொல்வார்கள். ராஜா சின்ன ரோஜா படத்தில் ரஜினிகாந்த் அணிந்திருந்த பலூன் பேக்கி பேண்ட் தைக்க அதே மஞ்சள் கலரோடு அவ்வளவு கூட்டம். தைப்பவர்களை விட அந்த சட்டைக்கான அளவு எடுத்து வெட்டுவதில் தான் கெட்டிக்காரத்தனம் இருக்கிறது.

அதில் ராஜேந்திரன் கில்லாடி. குறிப்பாக ஜாக்கெட் தைப்பதில் மன்னாதி மன்னன். அவரது கடையில் ராமவர்ம நகரைச் சேர்ந்த சிவா என்பவர் வேலை செய்து வந்தார். கீழ்ப்பகுதியில் இருந்த மாணிக்கம் கடைக்கு முடி வெட்டப்போகும் போது, மாடியில் இருந்த டெய்லர் கடைக்கும் போவேன். விடிய, விடிய அந்த 5 மிஷின்களும் இயங்கும். அவர்களுக்குத் துணையாக 24 மணி நேரமும் பாட்டுச் சத்தம் ஒலிக்கும். சிவா முருக பக்தர். அவர் கடையில் இருந்தால் டி.எம்.சௌந்தரராஜன் பாடிய பக்திப் பாடல்கள் ஒலிக்கும்.

எனக்கும் இடம் உண்டு
அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
எனக்கும் இடம் உண்டு
அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
எனக்கும் இடம் உண்டு
டி.எம்.சௌந்தரராஜனுடன் இணைந்து சிவா பாடிக் கொண்டிருப்பார். தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர்களுக்கும் தகுந்தவாறு குரலை மாற்றி பாடிய டி.எம்.சௌந்தரராஜன், மிகச்சிறந்த இசையமைப்பாளர் என்பது பலர் அறியாதது. எனக்கும் இடம் உண்டு பாடல் அவர் இசையமைத்தது தான். நடிகர் விக்ரம் நடித்த ‘ஜெமினி’ படத்தில் கலாபவன் மணி எனக்கும் இடம் உண்டு பாடலை வேறு டோனில் பாடியிருப்பார். ஆனால், ஒரு பக்திப் பாடல் எப்படியிருக்க வேண்டும் என்று கேட்டால் டிஎம்எஸ் குரலில் ஒலிக்கும் எனக்கும் இடம் உண்டு பாடலைச் சொல்லலாம்.
கார்த்திகை விளக்குப் பெண்களுடன்
திருக் காவடி சுமக்கும் தொண்டருடன்
கார்த்திகை விளக்குப் பெண்களுடன்
திருக் காவடி சுமக்கும் தொண்டருடன்
தினம் சூட்டிடும் ஞான மலர்களுடன்
ஒரு புல்லாய் முளைத்து தடுமாறும்
புல்லாய் முளைத்து தடுமாறும்
என டிஎம்எஸ் கிறங்கிப் பாடும் போது சொக்கிப் போவோம். இந்த பாடலை எழுதியவர் ‘வேலுண்டு வினையில்லை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் பாடல்களை எழுதியவர். ‘சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்’ (பாகம் 1 & 2), ‘இருள் கிழித்த செஞ்சுடர்கள்’ ஆகிய நூல்களை எழுதி புகழ்பெற்ற மதுரை நம்பியை அறிந்த தமிழ்ச்சமூகம், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தி பாடல்களை எழுதிய பாடலாசிரியர் தமிழ் நம்பியை அறிந்திருக்குமா என்பது சந்தேகம் தான். அவர் எழுதிய அத்தனை பாடல்களும் புகழ் பெற்றவை. கவியரசர் கண்ணதாசனை போலவே பக்திப் பாடல்களிலும் தமிழ் நம்பியின் தத்துவம் மிளிரும்.
அரசு அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் என்று அனைவரும் கேள்விபட்ட வரிகளை வைத்து தமிழ் நம்பி எழுதிய
அன்று கேட்பவன் அரசன் மறந்தால்
நின்று கேட்பவன் இறைவன்
அன்று கேட்பவன் அரசன் மறந்தால்
நின்று கேட்பவன் இறைவன்
நடுவில் மனிதன் வாழுகிறான்
நடுவில் மனிதன் வாழுகிறான்
வீணில் மனம் தடுமாறுகிறான்
இறைவா இறைவா
என்ற புகழ்பெற்ற பக்தி பாடலில் தத்துவத்தை குலைத்துக் கொடுத்தவர் தமிழ்நம்பி. இந்த பாடலில்,
மனம் போல் மாங்கல்யம் என்பார்
தன்மனமே சகலமும் என்பார்
மனம் போல் மாங்கல்யம் என்பார்
தன்மனமே சகலமும் என்பார்
தெரிந்தும் குணத்தை இழக்கிறான்
தெரிந்தும் குணத்தை இழக்கிறான்
இதயம் குலைந்து தவிக்கிறான்
இறைவா இறைவா…
என்று டி.எம்.சௌந்தரராஜடன் இணைந்து சிவா எக்கோ பாணியில் இறைவா இறைவா எனப் பாடுவார். கவியரசு கண்ணதாசனை போன்ற தத்துவ விசாரம் தமிழ் நம்பியின் பெரும்பாலான பாடல்களில் காண முடியும். ராஜேந்திரன் டெய்லர் கடையில் இப்படியான பாடல்கள் புதிய உணர்வை உருவாக்கின. ஏனெனில், அப்பாவின் கூட்டங்களில் கேட்ட கம்யூனிஸ்ட் பாடல்களுக்கும், ராஜேந்திரன் டெய்லர் கடை பக்தி பாடல்களுக்கும் நிறைய வித்தியாசம். ஆயினும் என் வாழ்வில், சிறுவயதில் இருந்து இப்போது வரை பாடல்களுடனான பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

அஜித் நடித்த ‘அமர்க்களம்’ படத்தில் பரத்வாஜ் இசையில் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடலில், வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று மரணம் மரணம் மரணம் கேட்டேன் என்ற பாடலை கவிஞர் வைரமுத்து எழுதியிருப்பார். ஆனால், இந்த பாடலுக்க முன்பே தமிழ்நம்பி எழுதிய ஒரு பக்தி பாடலில் இப்படியான சங்கதிகளை வைத்து எழுதியதை ராஜேந்திரன் கடையில் கேட்டிருக்கிறேன். டி.எம்.சௌந்தரராஜன் பாடிய,
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் – ஒரு
மரமானாலும் பழமுதிர்சோலை மரம் ஆவேன் – கருங்
கல்லானாலும் தணிகை மலையில் கல் ஆவேன் – பசும்
புல்லானாலும் முருகன் அருளால் பூ ஆவேன்…
பாடல் தான், ‘அமர்க்களம்’ பாடலை கேட்கும் போதெல்லாம் ஞாபகமூட்டும். இந்த புகழ் பெற்ற பாடலை எழுதியவர் தமிழ்நம்பி. டிஎம்எஸ் கணீர் குரலில் பாடல்களைக் கேட்பதில் இருக்கும் சுகமோ சுகம். தமிழ்நம்பி எழுதிய ஸ்ரீராம பக்திப் பாடல்கள் தொகுப்பில் இடம் பெற்ற ஒரு பாடல் மிகுந்த கவனம் பெற்றது.
அன்பின் வழியில் யார் நடந்தாலும்
அவனும் ராமனும் ஒன்று…
அழுபவர் கண்களை யார் துடைத்தாலும்
அவனும் ராமனும் ஒன்று
பெற்றவர் உள்ளம் பெருமிதம் கொள்ளும்
பிள்ளையும் ராமனும் ஒன்று
மற்றவருக்கெல்லாம் நல்வழி சொல்லும்
மனிதரும் ராமரும் ஒன்று…
என்று டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் குழுவினர் பாடிய இந்த பாடலின் வழியே அன்பை போதித்த தமிழ்நம்பி இன்றைய சமூகத்திற்கு மிகவும் தேவையாய் இருக்கிறார். திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக்குவேன் என்ற கூக்குரல்களுக்கு மத்தியில் அன்பின் வழியில் யார் நடந்தாலும் பாடல் தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட பாடல்களை எழுதிய தமிழ்நம்பியின் பாடல்களை தேடித்தேடி கேட்டிருக்கிறேன்.
பத்மஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா பாடிய நவராத்திரி பாடல்கள் புகழ் பெற்றவை. சுரும்பியன் இசையில் பதிவு செய்யப்பட்ட அத்தனை பாடல்களையும் தமிழ்நம்பி தான் எழுதியுள்ளார். வாணி ஜெயராம் பாடிய மகாலட்சுமி அவதாரங்கள் என்ற ஆல்பத்திற்கான பாடல்களை தமிழ்நம்பி தான் எழுதியுள்ளார். ஆர்.ராமானுஜம் இசையில் ஆழ்வார் திருநகரி நிலமிது என்ற வாணிஜெயராமின் புகழ் பெற்ற பாடல், தமிழ் நம்பியால் தான் எழுதப்பட்டது.
திரையிசை திலகம் கே.வி.மகாதேவன் இசையில் மலேசியா வாசுதேவன் பாடிய மகரப் பொன்னொளி என்ற ஐயப்பன் பாடலையும் தமிழ் நம்பி தான் எழுதியுள்ளார். தமிழ் நம்பியை எனக்கு அறிமுகப்படுத்திய ராஜேந்திரனின் ஆர்.டெக்ஸ் டெய்லர் கடை தான். புதூர் மெயின் ரோட்டில் வைத்திருந்த ராஜேந்திரன், சிக் டெய்லர் கடைக்கு எதிரே அதாவது தேசிய விநாயகர் கோயில் தெருவில் கடை திறந்தார். கடைகள் மாறினாலும் ராஜேந்திரன் தொழிலை விடவில்லை.

சிவபெருமானின் சிவதலங்கள் குறித்து டி.எம்.சௌந்திரராஜன் இசையில் ‘சிவசேத்திரங்கள்’ என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்ட அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ரகம். டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா பாடிய அனைத்து பாடல்களையும் தமிழ் நம்பி எழுதினார். இந்த பக்தி ஆல்பத்தில் ஒரு புதுமை செய்யப்பட்டது. ஒவ்வொரு பாடலுக்கும் முன் திருநீற்றுப் பதிகம், திருநேரிசையின் தொகையறா இடம் பெறும். திருஞான சம்பந்தர் அருளிய திருநீற்றுப் பதிகத்தின் முதல் வரியை தொகையாறாவாக கொண்டு பி.சுசீலா பாடிய,
ஆலவாய் அழகனே ஓம் ஐந்தெழுத்தின் அரசனே
மாமதுரை தெய்வமே என் மனம் நிறைந்த செல்வமே…
என்ற புகழ் பெற்ற பாடல் இத்தனை ஆண்டுகளான பின்பும் ரசிக்க வைக்கிறது. இதே போல கோடி மா தவங்கள் செய்து என்ற அப்பர் பாடிய திருநேரிசையை தொகையாறாவாக கொண்டு தமிழ் நம்பி எழுதிய இந்த பாடல், டி.எம்.சௌந்தரராஜன் பாடிய புகழ் பெற்ற பாடலாக திகழ்கிறது. அந்த பாடல்,
கொன்றை சூடிய பெருமானே…
கூத்தாண்டவரே மன்னனே
ராமேஸ்வரத்தின் ராமலிங்கமே
ஆண்டருள் அம்மையப்பா…
பக்தி பாடல் என்றாலும் ஒவ்வொரு பாடலுக்கும் இப்படியான புதுமை முயற்சி செய்த தமிழ் நம்பி, தேவா இசையில் எழுதிய பக்தி பாடல், எல்.ஆர்.ஈஸ்வரியின் புகழைப் பாடிக் கொண்டிருக்கிறது.

மகமாயி சமயபுரத்தாயே
உன் மகளெனக்கு எல்லாமும் நீயே…
மகமாயி சமயபுரத்தாயே
உன் மகளெனக்கு எல்லாமும் நீயே…
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் அம்மன் கோயில்களுக்கு வரும் பக்தர்கள் மலர் சாத்தி நீர் மோர், பானகம் நிவேதனம் செய்து வழிபாடு நடத்துவார்கள். இப்படியான கோயில்களில் அவர்கள் உரத்த குரலில் படிக்கும்
வளம் தரும் திருவே வாசவி தாயே கன்னிகா பரமேஸ்வரி
வழிபடும் அடியார் குலநலன் காக்கும் அன்னையே ஜெகதீஸ்வரி…
பாடல் தமிழ் நம்பி எழுதி பி.சுசீலா குரலில் ஒலித்தது தான்.
இசையரசி பி.சுசீலா பாடிய பக்தி பாடல்கள் எண்ணிக்கை அதிகம். அவர் அனைத்து மொழிகளிலும் பாடும் திறமை கொண்டவர். அவர் பாடிய பக்தி பாடல்களை ஹெச்எம்வி நிறுவனம் பதிவு செய்து வெளியிட்டுள்ளது. அதன் பின் அவை ஒலிநாடாக்களாக வெளிவந்தன. கே.வீரமணி- சோமு இசையில் ஒருவான துங்கா நதிக்கரை ஓரத்திலே, தாய் வீடு சமயபுரம் பாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இந்த பாடல்களை எழுதியவர் தமிழ்நம்பி தான்.
டி.எம்.சௌந்தரராஜன் பாடிய கந்தன் அருளமுதம் இசைத்தட்டில் இடம் பெற்ற அழகை எண்ணி அரும்பு விழியில் ஆடி வா முருகா, ஆயிரம் கோடி முத்தங்கள் பொழிந்து, எல்லா மலரிலும், கடலை படைத்து நிலத்தை போன்ற பாடல்கள் தமிழ்நம்பியின் சொற்பூக்களில் மணம் பரப்பியவை தான்.
மெல்லிசை மாமணி வி.குமார் இசையில் தமிழ்நம்பி எழுதிய பாடல்கள் அனைத்தும் புகழ் பெற்றவை. நவராத்திரிக்காக தயாரிக்கப்பட்ட
நவராத்திரி நாயகி என்ற பக்தி ஆல்பத்தில் இடம் பெற்ற பாடல்களை பி.சுசீலா பாடினார். அதில் ஒரு புகழ்பெற்ற பாடல்,
திருவிளக்கை ஏற்றி வைத்தோம்
திருமகளே வருக
குலம் விளங்க எங்கள் வீட்டில்
கொலுவிருக்க வருக
அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக
அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக
நிலவை எழுதாத கவிஞர்கள் இல்லை எனலாம். தமிழ்நம்பி நிலவைப் பார்த்த பார்வை புதுமை கொண்டது. நிலவை புகழும் நெஞ்சங்களே அது கதிரவன் ஒளியாகும் என்று எழுதிய அவர் பார்க்காத கண்ணுக்கு செவ்வானம் புதுமை கேட்டு பழகாத மனிதருக்கு சங்கீதம் புதுமை என்று எழுதியுள்ளார்.
செந்தூர் செல்லும் தென்றல் காற்றே முருகனைக் காண்பாயோ என்று காற்றின் மூலம் கடவுளுக்கு தூது அனுப்பியவர் தமிழ் நம்பி. அவர் எழுதிய உன்னையும் மறப்பதுண்டோ பாடலில்,
நீந்திய நதி மறப்பேன்
வீடும் நிலமும் மறந்திருப்பேன்
வடிவேல் ஏந்திய உனை மறந்தால்
நான் ஏந்திய உனை மறந்தால்
உலகில் எத்தனை நாள் இருப்பேன்?
என்று எழுதிய வரிகள் அடர்த்தியானவை. அவர் எழுதிய தந்தையுடன் அன்னை செய்த தவம் போலும் பாடலில் தந்தானத் தந்தனா என்ற சொல்லைக் கொண்டு பாடலை ரசிக்க வைத்திருப்பார். விநாயகரைப் போற்றி சரிகம வெளியிட்ட கலை முதலாகி ஒளிப்பேழையில் இடம் பெற்ற பாடல்கள் பக்தி மணம் கமழ்பவை. கவிஞர் தமிழ் நம்பி வரிகளில் இந்தப் பாடல்,. லலிதாவுடன் இணைந்து டி.எம்.சௌந்தரராஜன் பாடியது. முருகன் பாமாலை, ஸ்ரீ சண்முக தீபம், ஸ்ரீஐயப்பன் ஆதாரனை, பராசக்தி பாமாலை என பல்வேறு இசை ஆல்பங்களில் பாடல்களை எழுதிய தமிழ்நம்பி பக்தியிசையின் தவிர்க்க முடியாத ஆளுமை.
– ப.கவிதா குமார் (நினைவுகள் சுழலும்)
- https://maduraiseithi.in/p-kavitha-kumar-devotional-music-series-part-1/
- https://maduraiseithi.in/poets-who-propagated-devotional-music-1-m-p-sivam/
- https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-2/
- https://maduraiseithi.in/poets-who-propagated-devotional-music-3-kovai/
- https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-4/




சிறப்பான பதிவு!
வாழ்த்துகள்!
மிக்க நன்றி தோழர்.
நீங்கள் குறிப்பிட்ட எல்லா பாடல்களையும் பாடி மகிழ்ந்தேன்.. நன்றி. நன்றி
மிக்க நன்றி
மந்திரம் ஆவது நீறு… என்ற திருநீற்றுப் பதிகத்தின் அடிகளோடு தொடங்கும் ஆலவாய் அழகனே என்ற பாடலை உங்கள் பதிவை வாசித்த பின் மீண்டும் ஒருமுறை கேட்டேன். சரணத்தின் முடிவில் சோம சுந்தரேஸ்வரா என்ற சொல்லை உச்சரிக்கும்போது பாடலின் மொத்த சாரத்தையும் அதில் அடக்கி விடுவார் சுசீலா. தமிழ் நம்பி அவர்களுக்கு செய்யப்பட்ட மிகச் சிறந்த மரியாதையாக இந்தப் பதிவை நான் மதிப்பிடுகிறேன். நீங்கள் குறிப்பிட்டு இருக்கிற பல பாடல்களை பல நூறு முறை கேட்டு இருக்கிறேன். ஆனால் இன்னும் கேட்காத பாடல்களும் உள்ளன என்று தெரிந்து கொண்டேன். இவற்றை வெறும் பக்திப் பாடல்கள் என்று ஒதுக்க முடியாது. தமிழின் சொல் வளம், அழகு, மொழி வளம், ஓசை, சந்த நயம் என்று மிகப்பல கூறுகளை இந்தப் பாடல்களில் பார்க்க முடியும். மிக முக்கியமான விடயம், பாடலின் சொல் அழகை, கவிஞனின் கற்பனை வளத்தை எந்த விதத்திலும் அமுக்கி விடாமல் அவற்றுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அடக்கமாக அமைக்கப்பட்ட இசை அமைப்பு. இசைக் கருவிகளின் ஆதிக்கம் எந்தப் பாடலிலும் எங்கேயும் இருக்காது. கூட்டுழைப்பு. யூடியூபில் பாடல்களை பதிவேற்றம் செய்யும் பலரும் பாடல் ஆசிரியர்களின் பெயர்களை குறிப்பிடுவதில்லை. இது மிகப் பெரிய அநீதி. அந்த வகையில் தமிழ் நம்பி அவர்களுக்கு நீங்கள் செய்துள்ள மிகப்பெரிய நியாயம் இந்த பதிவு. பாராட்டுகிறேன்.
தொடர்க! இக்பால்
டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் மிகச்சிறந்த பாடகர் மட்டுமல்ல சிறந்த இசையமைப்பாளர் என்பது தமிழ் நம்பி அவர்களின் பாடல்களைக் கேட்கும் போது அரிய முடிகிறது. உங்கள் உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.