பக்தியிசை பரப்பிய பாவலர்கள் 4… மதிதாசன்

இசைமுரசு நாகூர் ஹனிபாவின் இனிய கீதங்கள்

நான் வசித்த மதுரை கோ.புதூர் தேசிய விநாயகர் கோயில் தெருவில் கள்ளிக்குளம் கண்மாய் என்று ஒன்று இருந்தது. அதன் எதிர்புறம் மண்மலை மேடு. இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கொஞ்சம் தாட்டியமானவர்கள். இரவு நேர செகண்ட் ஷோ சினிமாவிற்கு போய் விட்டு சைக்கிளில் வரும் போது போலீஸார் பிடித்து விசாரிக்கும் போது, மண்மலை மேடு என்று சொன்னால் முதுகில் டின் கட்டி விடுவார்கள். அதற்குக் காரணம் இருந்தது. அந்த பகுதியைச் சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் என்ற மாயன். மதுரை ஐ.டிஐ. பஸ்ஸ்டாப்பில் தங்கமகன் ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்றம் வைத்திருந்தார். அவர் தான் அந்த மன்றத்தின் தலைவர். அவர் தலைமையில் தான் பதூரில் பல இடங்களில் ரசிகர் மன்றங்கள் உருவாகின.

ரஜினி பக்தர்
நடிகர் ரஜினியின் தீவிர விசுவாசியான மாயன், ரஜினியைப் போலவே நடை, உடை, பாவனை கொண்டவர். நீண்ட காலமாக வெள்ளை நிற செருப்பு, பைஜாமா போன்ற உடை அணிந்திருந்தார். 1983-ம் ஆண்டு வெளியா தங்கமகன் படத்தைப் பார்த்து அப்படத்தின் ரஜினி கேரக்டரான அருண் என பெயர் மாற்றிக் கொண்டார். 1985-ம் ஆண்டு வெளியான ரஜினியின் இந்தி படமான கங்குவாவை பார்த்து நெற்றியில் குங்குமத்திலகம் இட்டிருந்தார்,

ராபின் ஹூட்
மாயனின் வலதுகரம் நாவல் பாண்டி. மதுரையை கலக்கிய ராபின் ஹூட். வசதி படைத்தவர்களிடம் இருப்பதை பறித்து இல்லாதவர்களிடம் ஒப்படைத்த கர்ணன். இவர் கமல்ஹாசனின் தீவிர விசுவாசி. மதுரையின் சிறந்த நாட்டியக் கலைஞர். மண்மலை மேட்டைச் சேர்ந்த மாயனும், நாவல் பாண்டியும் சேர்ந்து செய்த அலப்பறைகளால் போலீஸார் தூக்கம் தொலைந்து திரிந்தனர். புதூரில் கனரா வங்கி இன்று இருக்கும் இடத்திற்கு அருகில் புதிதாக சாராயக்கடை திறக்கப்பட்டது. பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் அக்கடை அகற்றப்படவில்லை. ஒரே நாளில் சாராயக்கடையை அடித்து நொறுக்கி மூடச்செய்தவர்கள் மாயனும், நாவல் பாண்டியும் தான். இதனால் பொதுமக்கள் மத்தியில் மாஸ் ஹீரோவானவர்கள். இந்த சம்பவத்திற்குப் பின்னால், இவர்கள் பின்னால் ஒரு பெரும் இளைஞர் கூட்டம் சேர்ந்தது.

இவர்கள் இருவரும் மிகுந்த இசைரசனை கொண்டவர்கள். இவர்கள் ஒன்று சேர்ந்து விட்டால், ஒரே பாட்டுக்கச்சேரி தான். புதூர் ஐ.டி.ஐ பஸ்ஸ்டாப்பில் லோடுமேன்கள் நிறைந்திருப்பார்கள். இங்கு மாதந் தவறாமல் பக்கீர்கள் வந்து விடுவார்கள். தலையில் பச்சை தலைப்பாகை அணிந்து பார்க்க கம்பீரமாக இருக்கும் பக்கீர்கள், பாட்டுப் பாடுவதில் வல்லவர்களான பக்கீர்கள், தாயிரா என்ற வட்டவடிவமான பறை போன்ற இசைக்கருவியை அற்புதமாக வாசிப்பார்கள். இந்த கருவி பேச்சுவழக்கில் தஹரா என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அருகி வரும் இசைக்கருவிகளில் இந்த தயிராவும் ஒன்று.

நாகூர் ஹனிபாவின் பாடல்கள்
மரத்தினால் செய்யப்பட்ட வட்டவடிமான சட்டகத்தில் ஆட்டுத்தோலினால் தாயிரா உருவாக்கப்படுகிறது. இதற்கு புளியங்கொட்டை தான் பசையாக பயன்படுத்தப்படுகிறது. இந்த கருவியை வாசித்துக் கொண்டே பக்கீர்கள் ஒரு காலத்தில் வீடு, வீடாக குழந்தைகளுக்கு மயில் தொகையால் வருடி ஓதுவார்கள். அரிசியோ, சில்லறை காசுகளோ அதற்கு மக்கள் வழங்குவார்கள். பக்கீர்கள் வந்து விட்டால் புதூர் ஐ.டிஐ பஸ் ஸ்டாப் பகுதியே களைகட்டி விடும். அவர்கள், இசைமுரசு நாகூர் ஹனிபாவின் பாடல்களை தாயிராவை இசைத்துக் கொண்டு அவ்வளவு அற்புதமான பாடுவார்கள். மாயனும், நாவல் பாண்டியும் குழந்தைகளைப் போல மாறி ஒவ்வொரு பாடல்களாக கேட்டு குதூகலிப்பார்கள்.

எங்கும் நிறைந்த இறையோனே
என் முகம் பாராததே
பொங்கும் கருணை ரஹ்மானே
பேரருள் தாராததேன்….

என்று நாகூர் ஹனிபாவின் பாடலை தாயிராவை தட்டியவாறு இரண்டு பக்கீர்களும் பாட ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு நடராஜன் கடை தேநீரும், பக்கோடாவும் வந்து விடும். நாகூர் ஹனிபாவின் குரலில் பாடுவது சிரமம். ஏனெனில், ஹைபிட்சில் பாடும் போது தொண்டை கிழிந்து விடும். ஆனால், பக்கீர்கள் பலர், தங்களை நாகூர் ஹனிபா போலவே சுருதி குறையாமல் பாடுவார்கள். நாகூர் ஹனிபாவின் குரலை வைத்து அவர் பாடிய பாடல் என்று மிக எளிதில் சொல்லி விடலாம். ஆனால், அந்த பாடலை எழுதியவர்கள் யார் சொல்ல முடியுமா?

கவிஞர் மதிதாசன்
நாகூர் ஹனிபா பாடல்கள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் கொண்டாடப்படுகிறது. அவரது பாடல்கள் மதங்களைக் கடந்து அனைத்து மக்களாலும் நேசிக்கப்படுகின்றன. ஹனிபா பாடிய பாடல்களை நாகூர் புலவர் ஆபிதீன், புலவர் தா. காசிம், கவிமணி பேராசிரியர் அப்துல் கஃபூர், கலைமாமணி நாகூர் சலீம், சாரண பாஸ்கரன், நாகூர் சேத்தான், கிளியனூர் அப்துல் சலாம், மதிதாசன் உள்ளிட்ட நிறைய கவிஞர்கள் எழுதியுள்ளனர். எங்கும் நிறைந்த இறையோனே பாடலை எழுதிய மதிதாசன் எழுதிய பாடல்கள் தனித்தன்மை வாய்ந்தவை.

உம்மை ஒருபோது நான் மறவேன் மீரா
ஷாஹே மீரா
எம்மான் நபிநாதர் வாஞ்சைமிகும் பேரா

என்று நாகூர் ஹனிபா பாடிய அற்புதமான பாடலுக்கு சொந்தக்காரர் மதிதாசன். இப்பாடலின் தொகையறாவை எழுதியவர் குணங்குடி மஸ்தான் சாஹிப். கவிஞர் மதிதாசன் என்ற சாயீர் அப்துல் ரஹீம் நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொரவாச்சேரியைச் சேர்ந்தவர். 1923-ம் ஆண்டு பிறந்த இக்கவிஞர், நாகூர் ஹனிபாவின் புகழ்பெற்ற பல பாடல்களை எழுதியுள்ளார் நாகூர் ஹனிபா பாடிய அத்தனைப் பாடல்களையும் இந்த பக்கீர்கள் என்ற இசை பாணர்கள் எப்படி நினைவில் வைத்து பாடுகிறார்கள் என்ற ஆச்சரியம் எனக்கு உண்டு. தாயிராவை தட்டியவாறு அடுத்த பாட்டு என்ன வேண்டும் என்று பக்கீர் கேட்கவும், நாவல் பாண்டியும், மாயனும் பட்டியல் போடுவார்கள்.

ஆற்றல் மிகும் அல்லாஹ்
போற்றுகின்றேன் அல்லாஹ்
ஆற்றல் மிகும் அல்லாஹ்
உன்னை போற்றுகின்றேன் அல்லாஹ்…

என்று மதிதாசனின் பாடலை பக்கீர்கள் பாடும் போது அல் அமீன் மஹாலில் இருந்து அவர்களுக்கு புரோட்டாவும், குடல் குழம்பும் வந்து விடும். நாகூர் ஹனிபாவின் பாடல்களை நேசித்த மாயனும், நாவல் பாண்டியும் இந்துக்கள். மாயன் நெற்றியில் எப்போதும் திருநீற்றுப் பட்டையும், கழுத்தில் உத்திராட்ச கொட்டையும் இருக்கும். நாவல் பாண்டி நெற்றியில் எப்போதும் குங்குமம் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் நெஞ்சங்களில் நாகூர் ஹனிபா என்ற இஸ்லாமியரின் பாடல்கள் குடி கொண்டிருந்தது ஆச்சரியமில்லை. ஏனெனில், நாகூர் ஹனிபாவின் குரல் வசியமயமானது. அது உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானது. நாகூர் நாயகம் ஷாகுல் ஹமீது வலியுல்லாஹ் அவர்களின் அற்புத வாழ்க்கை வரலாற்றைக் கூறும் வகையில் மதிதாசன் எழுதிய

கருணைக் கடலாம்
காதர் வலியின்
காரண சரிதம் கேளுங்கள்,
அருமை நாதர்
சாகுல்ஹமீது ஒலி
அற்புத சரிதம் கேளுங்கள்…

புகழ்பெற்ற பாடலை பக்கீர்கள் பாடும் போது, ஐ.டி.ஐ மாணவர்கள் கூட்டம் கூடி விடும். தாயிராவின் சுற்றியுள்ள சலங்கை போன்ற அந்த தகடுகளில் பக்கீர்கள் காட்டும் விரல் ஜாலம் மயக்க வைக்கும். நாகூர் ஹனிபாவின் பாடல்களுக்கு திரையிசைக் கலைஞர்கள் பலர் இசையமைத்துள்ளனர். மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி, எஸ்.வி.வெங்கட்ராமன், எம்.முத்து,டி.ஏ.கல்யாணம், குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்துள்ளனர். நாகூர் ஹனிபா பாடகிகள், பி.வசந்தா, ராணி, சரளா ஆகியோருடன் இணைந்து பல பாடல்களைப் பாடியுள்ளார்.

ஹம்மிங் குயினான பி.வசந்தாவுடன் இணைந்து நாகூர் ஹனிபா பாடிய

ஏகன் உண்மை தூதரே
ஏகன் உண்மை தூதரே
யா நபியே யா ரஸூலே யா ஹபிபே யா முஸ்தபா
எங்கள் ஸலாம் எங்களன் பின் ஸலாம்
எங்கள் ஸலாம் எங்களன் பின் ஸலாம்

அற்புதமான மெட்டு கொண்ட இந்த பாடலை மதிதாசன் தான் எழுதினார். நாகூர் ஹனிபாவின் குரல் அவரின் பாடலைக் கேட்பவர்களுக்கு நம்பிக்கையை விதைக்கும். பாடகி கே.ராணியுடன் இணைந்து ஹனிபா பாடிய அப்படியொரு பாடல், வாழ வாழ நல்ல வழிகள் உண்டு.

தமிழ் சினிமாவில் குமுதம் உள்பட பல படங்களில் கேள்வி கேட்பது போல பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இஸ்லாமிய கீதத்தில் அப்படியொரு பாடலை மதிதாசன் எழுதியுள்ளார். கே.ராணியுடன் நாகூர் ஹனிபா பாடிய அந்த புகழ் பெற்ற பாடல்,

திருமறையின் அருள் மொழியில் விளைந்திருப்பது என்ன?
அறிவு.
இறை தூதர் நபி பொன்மொழியில் பொதிந்திருப்பது என்ன?
அன்பு.
அறிவில் உருவாகி அன்பில் நிறைவதென்ன?
ஞானம்
அந்த ஞானத்தை வழங்கிடும் மூலப் பொருள் என்ன?
மௌனம் மௌனம்.

பக்கீர்களுக்கு அதிக பணத்தை வசூலித்து தரும் பாடல் மட்டுமின்றி ஒன்ஸ்மோர் மூலம் மீண்டும் பாடப்படும் பாடல் இது தான். புதூர் பணிமனை அருகே தீன் ஸ்டோர் இருந்தது. அந்த ஸ்டோரை சேர்ந்தவர்களும் இந்த கச்சேரியில் சேர்ந்து விட்டால், பக்கீர்கள் இன்னும் குஷியாகி விடுவார்கள். அவர்கள் தீனோரே நியாயமா மாறலாமா தூதர் நபி போதனையை மீறலாமா என்ற பாடலை விரும்பி கேட்பார்கள்.

இந்த பாடலும் இசைமுரசு நாகூர் ஹனிபாவும், கே.ராணியும் இணைந்து பாடிய பாடல் தான். டி.ஏ.கல்யாணம் இசையில் இசைத்தட்டில் சாதனை படைத்த இந்த பாடலையும் மதிதாசன் எழுதினார். அருள் மேவும் ஆண்டவரே, பாக்தாத்தில் வாழும். கண்கள் குளமாகுமதம்மா, உம்மை ஒரு போதும், எங்கும் நிறைந்த இறையோனே, ஜிந்தாபாத், உலகமக்கள் யாவருக்கும் உரிமையானவர் ஆகிய பாடல்களையும் அவர் தான் எழுதினார்.

காலையில் துவங்கும் பக்கீர்களின் இசைக்கச்சேரி இருட்டும் வரை நடைபெறும். மாதந்தோறும் அவர்களின் இசைக்கச்சேரியைக் கேட்பதற்கென்றே சம்பக்குளம், பரசுராமன்பட்டி, விஸ்வநாத நகர், ஆத்திக்குளம், தொழிற்பேட்டை குடியிருப்பு, சங்கர் நகர் பகுதிகளில் இருந்து இசை ஆர்வலர்கள் குவிந்து விடுவார்கள். இப்போதெல்லாம் பக்கீர்களையும் காணவில்லை. பாடல்களையும் காணவில்லை. ஆமாம், மதுரையை கலக்கிய ராபின் ஹூட் நாவல் பாண்டியும், ரஜினிகாந்த் ரசிகர் மாயகிருஷ்ணனும் என்ன ஆனார்கள் என்று தானே கேட்கிறீர்கள். டி.ஆர்.ஓ .காலனி அருகே பட்டப்பகலில் நாவல் பாண்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். நிலக்கோட்டை அருகே விபத்தில் மாயகிருஷ்ணன் உயிரிழந்தார்.
– ப.கவிதா குமார் (நினைவுகள் சுழலும்)

1)1)https://maduraiseithi.in/p-kavitha-kumar-devotional-music-series-part-1/

2)https://maduraiseithi.in/poets-who-propagated-devotional-music-1-m-p-sivam/

3https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-2/)

4)https://maduraiseithi.in/poets-who-propagated-devotional-music-3-kovai/

இப்போதே பகிருங்கள்

6 Comments

  1. Super… இது இசைவாணர்கள் வரலாறு மட்டுமல்ல கோ.புதூர் பகுதியின் வரலாறும் கூட . தொடரட்டும்.

  2. உண்மை. அவர் பாடல்கள் புகழ்பெற்ற அளவுக்கு அவரும் புகழ்பெற்ற அளவுக்கு அவருடைய பாடல்களை எழுதிய கவிஞர்களுடைய பெயர்களும் இசையமைத்தவர்களுடைய பெயர்களும் அவ்வளவாக பேசப்படவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. ஃபகீர்கள் சூபி ஞானியர் மரபை தொடரும் கலைஞர்கள். காணாமல் போகும் இந்த கலைஞர்கள், அவர்களுடன் கலையும் காணாமல் போகிறது
    தஞ்சை த மு எ க சங்க மாநில மாநாட்டில் தொடக்க நாள் அன்று சூபி கலைஞர்களுக்காக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டது சிறப்பு. நேரில் இருந்து சுவைத்த அனுபவம். ஹனிபா அவர்களின் குழு இசை கலைஞர்கள் மிகப் பலரும் இந்து மதத்தை சேர்ந்த சகோதரர்கள். மரியாதைக்குரிய சரளா அவர்கள் ஒரு நேர்காணலில் தனது கணவர் அம்பி அவர்கள் ஹனிபா அவர்களின் தபேலா இசைக்கலைஞர் என்றும் அம்பி இல்லாமல் பாடல் ரெக்கார்டிங்க்கு ஹனிபா அண்ணன் எப்போதுமே செல்ல மாட்டார் என்பதையும் கூறியது நினைவுக்கு வருகிறது. தமிழ் வெகுமக்கள் இசை உலகில் அவர் ஒரு தனி சகாப்தம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *