
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நாளை மறுநாள் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் தேர்தலில் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதன் இறுதிக்கட்டப் பிரசாரம் இன்று (ஏப்ரல் 21) மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதனால் வாக்காளர்களைத் தேடி வேட்பாளர்களும், கட்சியினரும் தொகுதி வாரியாக படையெடுத்துள்ளனர். இன்று மாலையுடன் பிரசாரம் ஓயும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியிலும், தவெக தலைவர் விஜய் சென்னை நந்தனத்திலும் இறுதிக்கட்ட பிரசாரம் செய்கின்றனர். தேர்தலை சுமுகமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இதன்படி கருத்துக்கணிப்பு வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எந்தவித தேர்தல் கருத்துக்கணிப்பும் இன்று மாலை 6 மணிக்கு பிறகு வெளியிடக்கூடாது. அதேபோல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பும் மேற்கு வங்காள இறுதிகட்ட தேர்தல் முடிந்த பின்னர் வருகிற 29-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மேல்தான் வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.



