
தேர்தல் கருத்துக் கணிப்புகள் எல்லாம் நமக்குச் சாதகமாக வர ஆரம்பித்துவிட்டன என்று அண்ணாமலை கூறினார்.
கோவை வடக்குச் சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இன்று(ஏப்ரல் 21) மாலையுடன் பிரசாரம் நிறைவடைகிறது. இந்த நிலையில், வானதி சீனிவாசனை ஆதரித்து இருசக்க வாகனப் பேரணி இன்று நடைபெற்றது. பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இதனை துவக்கி வைத்தார். அத்துடன் அவர் இருசக்கர வாகனம் ஓட்ட, பின்னிருக்கையில் வேட்பாளர் வானதி சீனிவாசன் அமர்ந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், “ தேர்தல் கருத்துக் கணிப்புகள் எல்லாம் நமக்குச் சாதகமாக வர ஆரம்பித்துவிட்டன. என்டிஏ கூட்டணியின் வெற்றி அலையைத் தேர்தல் கணிப்புகள் இன்னும் சரியாகக் கணிக்கவில்லை என்பது என்னுடைய கருத்து. மத்திய அரசின் நிதியைப் பயன்படுத்தக்கூடிய அரசு அமைய வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், திமுக அராஜக, வன்முறை அரசியலை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
மக்கள் எப்போதும் வாக்குப்பெட்டியின் மூலம் தான் பேசுவார்கள். ஏப்ரல் 23-ம் தேதி அவர்கள் பேசப் போகிறார்கள். செந்தில் பாலாஜி தனது தவறை எப்போது ஏற்றுக் கொண்டார்? நாளை மறுநாள் வரை அவர் ஒரு காந்தியவாதி போல பேசுவார். ஆனால், ஏப்ரல் 23-ம் தேதி அவரது முகத்திரையை மக்கள் கிழிப்பார்கள். தேர்தல் ஆணையம் கூடுதல் பணியாளர்களைக் கொண்டு வலுவாகப் பணியாற்ற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். இந்த பிரசாரத்தில் பாஜக, அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.



