
வாக்களிப்பதை செல்போனில் படம் எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட தவெக ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்குப்பதிவின் போது வாக்காளர்கள் கடைபிடிக்க வேண்டிய கடமைகள் குறித்து தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. அதில், வாக்காளர் வாக்களிப்பதை வீடியோ எடுத்து வெளியிட்டால், சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தது.
ஆனால், இந்த எச்சரிக்கையை மீறி நடிகர் விஜய்யின் விசில் சின்னத்திற்கு வாக்களிப்பதை வீடியோ எடுத்து வெளியிட்ட தவெக ஆதரவாளர் இன்று (ஏப்ரல் 23) கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஊராட்சி ஒன்றியம், குனிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் அப்பகுதி அதிமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்தவர்.
இவர் தவெகவின் விசில் சின்னத்துக்கு வாக்களித்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த காட்சிகளை ஆய்வு செய்த தேர்தல் அதிகாரிகள் போலீஸில் புகார் செய்தனர். இதன் பேரில், சக்திவேலை கந்தலி போலீஸார் கைது செய்து திருப்பத்தூர் சிறையில் அடைத்தனர்.



