தெய்வங்கள் கேட்க வரும் தேனிசைப் பாடல்கள்

தேர்தல் காலம் என்பதால், திடீர் திடீர் என செல்போன் அழைப்புகள். அதில் வேட்பாளர்கள் வாக்கு கேட்கும் ரிக்கார்ட் வாய்ஸ்களும் உண்டு. அப்படித்தான் தேர்தல் அன்று (ஏப்ரல் 23) ஒரு அழைப்பு. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாகவும் அதனால் திமுகவை தோற்கடிக்க மதுரையில் வடக்குத் தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற ஒரு ரிக்கார்ட் வாய்ஸ். ஏ.ஐ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அந்த வாய்ஸ்க்கு சொந்தக்காரர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.
மதுரையில் மேடைக்கலைஞனாக ஒரு காலத்தில் இருந்த நான், பல குரல்களில் பேசியுள்ளேன். குறிப்பாக ஜெயலலிதா குரலில் பல மேடைகளில் பேசியிருக்கிறேன். தீக்கதிர் செய்தியாளராக இருந்த போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை ஓபுளா படித்துறையில், தேர்தல் காலத்தில் நடத்தப்பட்ட ஒரு நாடகத்தில் ஜெய்ஹிந்த்புரம் கே.ராமமூர்த்தி ஜெயலலிதா வேடமிட்டிருந்தார். அவருக்கு ஹிட்லர், அம்பேத்கர் என எல்லா வேடமும் அப்படியே பொருந்தும். அப்படி ஒரு முக லட்சணம். ஆனால், சொல்லிக் கொடுக்கும் வசனங்களைத்தான் மறந்து விடுவார்.
அன்று அவர் மேடையேறிய போது பயங்கர அப்ளாஸ். அப்படியே பச்சைக் கலரில் ஜெயலலிதா போல சேலை அணிந்து பவ்யம் காட்டினார். அவரை வாயை அசைக்கச் செய்து விட்டு மேடையின் கீழ் இருந்து ஜெயலலிதா குரலில் பேசினேன். அவருடன் இணைந்து அந்த மேடையில் கலக்கியவர் சன் டிவியில் அசத்தப்போவது யாரு சாம்பியன்களில் ஒருவரான வடிவேல் கணேசன். ஜெயலலிதாவும், நடிகர் வடிவேலுவும் சந்தித்து கொண்டால் எப்படியிருக்கும் என்ற கற்பனையில் உருவான அந்த ஸ்கிரிப்ட் என்னால் எழுதப்பட்டது தான்.
தமிழ்நாட்டின் ஆளுமைமிக்க சக்தியாக திகழ்ந்த ஜெயலலிதாவின் குரலில் இருக்கும் மென்மையின் தன்மையே அழகு தான். அவர் சில திரைப்படங்களில் சொந்தக்குரலில் பாடியுள்ளார் என்பது நான் அனைவருக்கும் தெரியும். அவர் திரையுலகில் பிரபலமாக இருந்த காலத்தில், மறைந்த வயலின் வித்வானும், இசையமைப்பாளருமான குன்னக்குடி வைத்தியநாதன் இசையில். சில பக்தி பாடலைப் பாடியுள்ளார். அதில் ஒரு பாடல்,
தங்க மயில் ஏறி வரும்
எங்கள் வடிவேலவன்..
திருவருள் தந்திடுவான்
திருத்தணி முருகையன்..
இந்த பாடல், அம்மா என்றால் அன்பு என்ற ஆல்பத்தில் இடம் பெற்றது. இந்த பாடலை எழுதியவர் மு.தவசீலன். 40 ஆண்டுகளுக்கு முன் இவரால் எழுதப்பட்ட இந்த பாடல், தமிழ்நாடு முழுவதும் 2020-ம் ஆண்டு மீண்டும் ஒலித்தது. கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை சித்தரித்து வெளியிடப்பட்ட வீடியோவிற்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஜெயலலிதா பாடிய தங்க மயில் ஏறி வரும் எங்கள் வடிவேலவன் என்ற பாடல் ஒலித்தது. இப்படி சாகாவரம் பெற்ற பாடலை எழுதிய கவிஞர் மு.தவசீலன், பக்தியிசை உலகில் எழுதிய அத்தனைப் பாடல்களும் முத்துக்கள்.

என் இளமைக்காலத்தில் நான் வசித்து வந்த தேசிய விநாயகர் கோயிலில் அன்றாடம் ஒலிக்கும் பாடல்களில் மிக முக்கியமானது
ஆயிரம் இதழ்கொண்ட தாமரைப்பூ
எங்கள் தேவிமுகம்- அந்த
ஆதிசக்தி கருமாரி ஆலயம்
வாழ்வு தரும்..
மங்கையரெல்லாம் போற்றி வணங்கும்…
மங்கலச் செல்வம்…
மங்கையரெல்லாம் போற்றி வணங்கும்…
மங்கலச் செல்வம்…
அதைக் குங்குமத்தாலே அள்ளிக் கொடுக்கும்…
கலியுக தெய்வம்…’
இந்த பாடலை இப்போது கேட்டாலும், மார்கழி மாதக்குளிர் வாட்டத் துவங்கி விடும். இசையரசி பி.சுசீலா பாடிய இந்த பாடல் ஒவ்வொரு நாளும் மார்கழி மாதம் அரசமரத்தில் கட்டப்பட்ட ஒலிபெருக்கியில் இருந்து ஒலிக்கும்.
‘நதியாய் பாயும் பன்னீராலேஅபிஷேகம்- தினம்
நாற்பது கோடி நறுமலராலே அலங்காரம்….’
என்று பி.சுசீலா பாடும் அழகில் மெய்யுருகிப் போவேன். ஒரு பக்திப்பாடலுக்குள் எத்தனை சந்தம் என வியக்க வைக்கும் வகையில் எழுதப்பட்ட இந்த பாடலை நீங்கள் ஒருமுறை கேட்டுப்பாருங்கள். ம் என்ற சொல்லைக் கொட்டி இத்தனை அழகான பாடலை எப்படி இவர் எழுதினார் என வியக்க வைக்கும். பக்தியிசை உலகில் தவிர்க்க முடியாத கவிஞர் மு.தவசீலன் எழுதிய ஒவ்வொரு பாடலும் காலப்பெட்டகங்கள்.

குன்னக்குடி வைத்தியநாதன், எச்.எம்.வி.ரகு, ஆர்.ராமானுஜம், வி.குமார், சூலமங்கலம் சகோதரிகள், டி.ஆர்.பாப்பா, கே.வீரமணி, சோமு, கஜா, பிரபாகர், பத்ரி உள்ளிட்ட பலரின் இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை மு.தவசீலன் எழுதியுள்ளார். பி.சுசீலா குரலில் அவர் எழுதிய அம்மன் பாடல்கள் புகழ் பெற்றவை.
ஆதி பரமேஸ்வரியின்
ஆலயமே வேற்காடு
ஆதி பரமேஸ்வரியின்
ஆலயமே வேற்காடு
அன்னையவள் திருப்புகழை
தினம் தினம் நீ பாடு
என்று 1975-ம் ஆண்டு ரகு இசையில் பி.சுசீலா பாடிய பாடலை மு.தவசீலன் எழுதினார். இந்த பாடல் அம்மன் பக்தி பாடல்களுக்கு மகுடமாய் திகழ்கிறது.மாங்காடு மணிவிளக்கே காமாட்சி தாயே. தவமிருந்தாலும் கிடைக்காதது நிம்மதி, வைகறைப் பொழுதில் விழித்தேன், கருமாரி உன் பதமே என பி.சுசீலா மனமுருக பாடிய பக்திப் பாடல்கள் தவசீலனின் எழுத்துக்களுக்கு அச்சாரமாய் திகழ்கின்றன.

சபரிமலை சீசன் தொடங்கி விட்டால் ஐயப்பன் புகழ் பாடும் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கி விடும். கலைமாமணி கே.வீரமணி பாடிய ஐயப்பன் பக்தி பாடல்களுக்கு தனி இடம் உண்டு. பாடலின் வரிகளை உணர்ந்து பாடும் அவரது குரலில் இருக்கும் சாந்தம் கேட்பேரின் மனங்களுக்குள் ஊடுருவி விடும்.
சோமு- கஜா இசையில் அவர் பாடிய,
ஜீவன் என்பது உள்ளவரை என்
நெஞ்சம் வணங்கும் சபரிமலை
அரிகரன் புகழை பாடும் வரை
வாழ்வினில் தோன்றும் சாந்தமலை
பாடல் மு.தவசீலனின் கற்பனையில் உதித்தது தான்.
சபரியிலே தெரியுதுபார் மகரஜோதி- தர்ம
சாஸ்தாவின் அருள்கூறும் கருணை ஜோதி
என்ற கே.வீரமணி பாடிய மற்றொரு பாடலில், ‘மலையெங்கும் எதிரொலிக்கும் சரணகோஷம், மனமகிழும் சாமிக்கு தினம் நெய்யபிஷேகம்’ என்று மு.தவசீலன் எழுதியிருப்பார். கே.வீரமணி பாடிய புகழ் பெற்ற பாடலான ஆனைக்காவில் அருள் புரியும் அகிலாண்டேஸ்வரியே பாடல் மு.தவசீலன் எழுதியது.
இந்த அழகிய பாடலுக்கு இசை மீட்டியவர்கள் வீரமணி- சோமு. பம்பை நதிக்கரையே உந்தன் பெருமைக்கு இணை இல்லையே, சரணம் பாடுவோம்
ஸ்வாமி சரணம் பாடுவோம் ஆகிய கே.வீரமணிய பாடிய ஐயப்பன் பாடல்களை மு.தவசீலன் எழுதியுள்ளார்.

எம்.எல்.வசந்தகுமாரி குரலில் ஒலித்த ‘சரணம் என்பதே நாதம்’ என்ற அழகிய பாடல் தவசீலன் பக்தியிசை உலகிற்குத் தந்த கொடை. அறுபடை வீடுகளில் தவறாமல் ஒலிக்கும் குரல்களுக்குச் சொந்தக்காரர்கள் என்றால் அது சூலமங்கலம் சகோதரிகள் தான். அவர்கள் பாடிய முருகன் பாடல்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. ‘துதிப்போர்க்கு வல்வினை போம்’ என்று 1970-ம் ஆண்டுகளில் அவர்கள் பாடிய கந்த சஷ்டி கவசம் இசைத்தட்டு விற்பனை உலகில் மகத்தான சாதனையைச் செய்தது. அவர்களுக்காக மு.தவசீலன் எழுதிய இந்தப் பாடல், கேட்கும் போதெல்லாம் மனதிற்குள் மணியடிக்கும்.
ஓம் என்று நினைத்தாலே போதும்
முருகன் வேல் வந்து அருள் தந்து
நம் நெஞ்சை ஆளும்
ஓம் ஓம் ஓம்…
சூலமங்கலம் சகோதரிகளின் பக்தி பாடல்களைக் கேட்டால், அது ஒரே மெட்டில் இருக்காது. ஏனெனில், இருவரும் மிகுந்த இசையறிவு உடையவர்கள். சிறந்த இசையமைப்பாளர்கள். இதன் காரணமாக சகோதரிகள் பாடும் பெரும்பாலான பாடல்களின் மெட்டு விதவிதமாக இருக்கும்.

அப்படி ஒரு முருகன் பாடல்,
எங்கும் முருகனைப் பார்க்கின்றேன்- என்றும்
அவன் குரல் கேட்கின்றேன்
பார்த்திடும் கண்களில் தெரிகின்றான்
பாடிடும் நெஞ்சில் அருள்கிறான்…
என்ற இந்தப் பாடலின் மெட்டு ரசிக்க வைக்கும். ஏனெனில் பல்லவியைத் தொடர்ந்து வரும் சரணத்தில் சூலமங்கலம் சகோதரிகள் காட்டும் பாவம், அடடே போட வைக்கும். இந்த அற்புதப் பாடலுக்கு சொந்தக்காரர் மு.தவசீலன் தான். அவர் எழுதிய முருகா உனக்கு புகழ் மாலை, முருகன் அமர்ந்த பெருமையோடு வண்ண மயில் ஆடுது பாடல்கள் சூலமங்கலம் சகோதரிகளால் பாடப்பட்டவை. வாணி ஜெயராம், டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம், தேரெழுந்தூர் சகோதரிகள், ராதா- ஜெயலட்சுமி, எம்.ஆர்.விஜயா, ராஜராஜசோழன், கே.ராஜு உள்ளிட்டோர் பாடிய ஏராளமான புகழ்பெற்ற பக்திப் பாடல்களை எழுதிய மு.தவசீலன் ஒரு அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல்கள் இல்லாமல் கோயில் திருவிழாக்கள் நடப்பதில்லை. அவர் பாடும் டெம்போவிற்கு வேறு யாரும் பாட முடியாது. பம்பை, உடுக்கைக்கு இசைந்தவாறு ஒரு இசைக்கருவியாய் மாறி விடும் ஈஸ்வரியின் குரல். இதனால் தான் அம்மன் பாடல்கள் என்றால் அது எல்.ஆர். ஈஸ்வரியின் தனிச்சிறப்பாக மாறி விடும்.
அவர் பாடிய,
ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா – நாங்க
எண்ணி வந்த வரம் கொடுக்க – வாரும் அம்மா
ஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா – இங்கு
உன்னை அன்றி வேறு கதி – ஏதம்மா
என்ற பாடல் மிக வேகமான தாளக்கட்டு கொண்டது. வரிகளின் தாளத்திற்கேற்ப எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் உள்ள வேகம் அசர வைக்கும். இந்த பாடல் ஒலிக்காத மாரியம்மன் கோயில்கள் இல்லை. ஆனால், இந்த பாடலை எழுதிய மு.தவசீலனை யாரும் அறிந்திருக்கமாட்டார்கள். எல்.ஆர்.ஈஸ்வரியின் மற்றொரு ஆட்டம் போட வைக்கும் அம்மன் பாடலையும் மு.தவசீலன் எழுதியுள்ளார்.
கண்ணபுர நாயகியே மாரியம்மா…
நாங்க கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா…
கண்ணபுர நாயகியே மாரியம்மா…
நாங்க கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா… அம்மா…
கண்ணபுர நாயகியே மாரியம்மா…
நாங்க கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா…
கண் திறந்து பார்த்தாலே பொதுமம்மா…
எங்க கவலை எல்லாம்…
மனச விட்டு நீங்குமம்மா… அம்மா…
இதில் அம்மா என்று அதிரும் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலைக் கேட்டு உறைந்து கிடக்கும் தெய்வம் விழித்துக் கொள்ளும். இப்படியான உணர்வுப்பூர்வமான எத்தனையோ பாடல்களை எழுதிய மு.தவசீலன் தெய்வங்கள் கேட்கவரும் தேனிசைப் பாடல்கள் என்ற நூலின் சொந்தக்காரர் ஆவார். இவர் தமிழ் திரையுலகிற்குச் சென்றிருந்தால் புகழ்பெற்றிருப்பார். ஆனால், அவரது இசைப்பயணம் பக்தியிசையோடு முடிந்து போனது பெரும் சோகம்.
-ப.கவிதா குமார் (நினைவுகள் சுழலும்)
1)https://maduraiseithi.in/p-kavitha-kumar-devotional-music-series-part-1/
2)https://maduraiseithi.in/poets-who-propagated-devotional-music-1-m-p-sivam/
3)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-2/
4)https://maduraiseithi.in/poets-who-propagated-devotional-music-3-kovai/
5)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-4/
6)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-5/



