
மதுரை மூன்றுமாவடிக்கு இன்று காலை வருகை தந்த கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடைபெற்றது.
உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சித்திரைத் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிலையில், மதுரை அழகர்கோவிலில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 27-ம் தேதி தொடங்கியது. அழகர்மலையில் இருந்து மதுரை நகருக்கு நேற்று மாலை புறப்பட்ட கள்ளழகரை தரிசிக்க சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கண்டாங்கி பட்டு உடுத்தி கையில் நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார். இதையடுத்து கோயிலில் 18-ம் படி கருப்பணசுவாமி சன்னதி முன்பு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தன. அப்போது கள்ளழகரின் பல்லக்கு உத்தரவு பெற்று நகர்ந்தது. பக்தர்களின் கோவிந்தா முழக்கத்துடன் அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் பொய்கைக்கரைபட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் மண்டபங்களில் எழுந்தருளினார்.

மதுரை கோ.புதூர் மூன்றுமாவடியில் இன்று (ஏப்ரல் 30) காலையில் கள்ளழகர் வந்து சேர்ந்தார். அங்கு அவரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. கண்டாங்கி பட்டு உடுத்தி தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகருக்கு பக்தர்கள் எதிர்சேவை அளித்தனர் அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகரை வழியெங்கும் பக்தர்கள் சக்கரை தீபம் ஏந்தி வரவேற்றனர்.
மதுரை லூர்தன்னை திருத்தலம் முன்பு கள்ளழகரை பாதிரியார்கள் திரண்டு வரவேற்றனர். சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நடந்த இந்த நிகழ்ச்சி பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் பக்தர்களின் தாகம் தீர்க்க குளிர்மோர் மற்றும் குளிர்பானங்கள் பல்சமய உரையாடல் குழு, திருவட்பேரவை மற்றும் சிறுபான்மை நலக்குழு சார்பில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பல்சமய உரையாடல் குழு செயலாளர் பாதர் பால் பிரிட்டோ, பாதர் பெனடிக் பெர்னபாஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மண்டபகப்படிகளில் எழுந்தருளும் கள்ளழகர், அவுட்போஸ்ட்டில் உள்ள அம்பலக்காரர் மண்டபகப்படியில் இருந்து மாலையில் தல்லாகுளம் பெருமாள் கோயில் அடைகிறார்.
மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் நாளை (மே 1) அதிகாலை 5.35 மணிக்கு மேல் 5.55 மணிக்குள் நடைபெறுகிறது. இந்த முக்கிய நிகழ்வைக் காண தென்மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரை நகரில் குவிந்து வருகின்றனர். இதனை முன்னிட்டு மதுரை நகரில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



