
1949 செப்டம்பர் 17-ல் துவங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் தன்னுடைய 75 ஆண்டு கால பயணத்தை தொடர்ந்து, பவள விழா கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறது. அது நீதிக்கட்சியின் அதைத் தொடர்ந்த, திராவிட கழகத்தின் நீட்சி என்றாலும், இன்றளவும் திராவிட இயக்கக் கொள்கைகளை எத்தனை இன்னல்களுக்கு இடையிலும், அதன் ஜோதியை அணைய விடாமல் அண்ணா, கலைஞர், ஸ்டாலின், உதயநிதி எனத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
திமுகவின் வரலாற்றை, அதன் ரத்தச் சுவடுகளை, எதிர்காலச் சந்ததியினரும் தெரிந்து கொள்ளும் பொருட்டு, விரிவான தகவல்களுடன் கூடிய நூலாக தொகுத்து வெளியிட்டிருக்கிறது.
தனது கட்சிக்காரர்களை வைத்து மட்டும் அல்லாது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழ்த் தேசியத் தலைவர்கள், தலித்தியத் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், காட்சி ஊடகத்தினர், எழுத்தாளர்,ஓவியர், பல்துறை நிபுணர்கள் என பொதுவான தளத்தில் நின்று பெறப்பட்டுள்ள கட்டுரை என்பதால், செய்தியின் உண்மைத் தன்மையில் ஒரு கன பரிணாமம் கொண்டுள்ளது. மொத்தம் 112கட்டுரைகள் 1120 பக்கங்கள் தரமான தயாரிப்பு என புத்தகம் நம்மை வசீகரிக்கிறது.
புத்தகத்தை முழுமையாக வாசித்து முடிக்கையில், ஒரு நூற்றாண்டு கால தமிழ்நாட்டின் வரலாற்றை தெரிந்து கொள்ள முடிகிறது. நேத்து பூத்து இன்று மடியும் காளான்களுக்கு மத்தியில், திமுக ஒரு வைரம் பாய்ந்த ஆலந்தருவாய் கிளை பரப்பி, விழுது இறக்கி, அதன் வேர்கள் இம் மண்ணில் மனிதர்களோடு பின்னிப் பிணைந்த கிடப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இம் மண்ணில் திமுக வேர் கொண்ட தினத்திற்கும், இன்று தமிழ்நாடு அடைந்திருக்கும் அளப்பரிய வளர்ச்சிக்கும், அந்த இயக்கம் ரத்தத்தாலும், வேர்வையாலும் தான் இவ்வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன. இன்றளவும் அதன் கொள்கைப் பிடிப்பின் கண்ணியை, எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் தொடர்கிறது. இந்தப் புத்தகத்தில் உள்ள 112 கட்டுரைகளும், திரும்ப திரும்ப பல்வேறு கட்டுரையாளர்கள் வழியாக இந்தக் கருத்துக்களே சொல்லப்படுவதால், அனைத்து கருத்துக்களும் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இந்தப் புத்தகத்தின் முழுமையான வரைவாக கீழ்க்கண்ட தலைப்புகளாக பிரிக்கலாம்
1 திராவிடக் கருத்தியல்
2. சமூக நீதிக் கோட்பாடு
3.மாநில சுயாட்சி
4.மொழிப் போராட்ட வரலாறு

திராவிடக் கருத்தியல்
ஆரியத்திற்கு எதிராக ஒரு மாற்று அரசியலை முன்வைத்து, அன்றிருந்த தமிழ்நாட்டுச் சூழலில் திராவிடக் கருத்தியலை முன்னெடுத்து, இன்று அதன் மேல் தமிழ்த் தேசியரும், ஆரியப் பார்ப்பனர்களும், ஆயிரம் அவதூறுகளை அள்ளி விட்டாலும், திராவிடக் கருத்தியலை மிக உறுதியாக கைப்பற்றி இன்றும் காத்திரமாக தமிழர்களை காக்கும் கேடயமாக, கைவிளக்காக நெஞ்சு நிமிர்ந்து தூக்கிச் சுமக்கிறது திமுக. வரலாற்று ஆய்வாளர்களும், மொழியியல் வல்லுநர்களும் ஆய்ந்து சொன்ன இனக்கோட்பாட்டை சரியாக புரிந்து கொண்டு, அதன் வழியே தனது அரசியல் பயணத்தை மிகத்தெளிவாகவே துவக்கியது திமுக. அந்த வகையில் தனது கொள்கை சாதுரியம் எனலாம். அந்தத் திராவிடக் கோட்பாடுதான் இன்று வரை ஆதார நூலாகத் திகழ்கிறது. இன்று எண்ணற்ற கேள்விகளும், வசை பாடல்களும் நவீனப் புரிதலற்ற இனவாதிகளால் கிளப்பி விடப்பட்டாலும், திராவிடன் ஸ்டாக் என்று முனைமுகத்து நிற்கும் சொல்லாக, அவர்கள் பயன்படுத்தும் வாளாக கையேந்தி நிற்க முடிகிறது.

சமூக நீதிக்கோட்பாடு
நீதிக்கட்சியின் தொடர்ச்சியாகத்தான் திராவிடர் கழகம் தந்தைப் பெரியாரால் துவங்கப்பட்டது. நீதிக்கட்சியின் கொள்கைகளே பிரதானமாக பேசப்பட்டாலும், ஒரு காலக்கட்டத்தில் அதன் முன்னனித் தலைவர்கள் அறிஞர் அண்ணா, இரா.நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, சம்பத் ஆகியோர் கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறி திமுகவைத் தொடங்கினர் .இவர்களும் அந்த சமூக நீதி கோட்பாட்டையே பின்தொடர்ந்தன.ர் சாதி ஒழிப்பு, இடஒதுக்கீடு, சமத்துவம் ஆகியவையே அவர்களின் பிரதானமான முழக்கமாக இருந்தது.
அன்றிருந்த சமூகச் சூழலும், காங்கிரஸ் கட்சியினரும், மிகவும் பிற்போக்குவாதிகளாகவும், ஒரு சாதியினயினர் மட்டும் கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னேறி, பிற சமூக மக்களை அடிமைப்படுத்தும் சூழலில் திமுகவின் இந்த கோரிக்கை முழக்கம். இளைஞர்களை வெகுவாக ஈர்த்தது. சாரை சாரையாக திமுகவில் இணையத் துவங்கினார்கள். மிகப்பெரிய எழுச்சியே இக்காலத்தில் ஏற்பட்டது. அது கட்சி வளர்ச்சியை எளிதாக நகர்த்திச் சென்றது. இன்று தமிழ்நாட்டில் நாம் அனுபவித்து வரும் ஏராளமான சமூக நீதித்திட்டங்கள் யாவும் திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டவைதான். திமுகவை திட்டித் தீர்க்கும் இன்றைய இளைஞர்கள், அவர்கள் அப்பாக்கள், தாத்தாக்கள் யாவரும் திமுகவின் அரசுத் திட்டங்களால் பயனடைந்தவர்களே. நேற்றைய வரலாற்றை சொல்லிக் கொடுக்காத தண்டனையை இன்றைய திமுக சந்தித்து வருகிறது என்றால் மிகையல்ல.

மாநில சுயாட்சி
திமுகவைத் துவங்கிய காலத்தில் திராவிட நாடு எனும் தனி நாடு கோரிக்கையை முன்வைத்து தான் மிகத் தீவிரமாக இயங்கியது. 1963-ல் ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட, பிரிவினைவாதத் தடைச்சட்டம் 16 வது சட்டத்திருத்தம் காரணமாக, ஒரு காலக்கட்டத்தில் அதை முன்வைத்து அரசியல் செய்ய இயலரமல் அதை கைவிட்டது. அதன் காரணங்களும், தேவைகளும் அப்படியே தான் இருக்கிறது தேவை கருதி அதை மீண்டும் பயன்படுத்துவோம் என்றார் அண்ணா. இன்றளவும் மாநிலங்களின் சுதந்திரத்தில் காலை வைத்து மிதித்து கொண்டிருக்கும் ஒன்றிய அரசை எதிர்த்து கடும் போராட்டங்களை மக்கள் மன்றத்திலும், சட்ட நடவடிக்கைகள் மூலமாகவும் மீட்டெடுத்து வருகிறது. அன்றைய காங்கிரஸ் அரசும், இன்றைய பாஜக அரசும் கொடுமையான சட்டங்களைக் கொண்டு வந்து, மாநிலத்தின் குரல்வளையை நெறித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு எதிராக ஒரு வலுவான குரலை தமிழ்நாடு எழுப்பிக் கொண்டிருக்கிறது.
1969 ல் பி.வி. ராஜமன்னார் தலைமையில் மாநில உரிமைகள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. முரசொலி மாறன் மாநில சுயாட்சி என்ற தலைப்பில் மிக விரிவான புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் மாநிலங்களின் உரிமைகள் என்ன, ஒன்றிய அரசின் கடைமைகள் குறித்தும் விரிவாக பேசப்பட்டிருக்கின்றன. ஒன்றிய அரசால் 1976 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை ஜனநாயக விரோதமாக திமுக அரசு கலைக்கப்பட்டு, நெருக்கடி நிலை காலத்தில் மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மிகக்கொடூரமாக தாக்கப்பட்டனர்.

மொழிப் போராட்ட வரலாறு
இந்தியாவில் 38 மாநிலங்கள் உள்ள நிலையில், மொழிக்காக போராடி உயிர்நீத்தவர்கள் என்றால் தமிழர்கள் மட்டுமே, மொழிப்போர் தியாகிகள் இங்கு மட்டுமே உள்ளனர். இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழ்நாடு வீறு கொண்டு எழுந்தது. அந்தப் போராட்டத்தை துவக்கி வழிநடத்தியது திமுக மட்டுமே, எண்ணற்ற உயிர்ப்பலிகளும் நிகழ்ந்தது. தாளமுத்து, நடராசன் மொழிப் போர் தியாகிகள் ஆவர். மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி எழுத்துகள் அழிப்பு, ரயில் மறியல் என போர்க் கோலம் பூண்ட நாட்கள். அவை வெகுவாக இளைஞர்களை தன்வசம் ஈர்த்தது. இன்றும் கூட ஒன்றிய அரசு மும்மொழிக் கொள்கையை அமுல்படுத்த பல வடிவங்களில் முயன்று வருகிறது. திமுக பல போராட்டங்கள் வழியே அவற்றை விரட்டி வருகிறது. 1938-ல் பெரியார் துவக்கிய பேராட்டம், 1965-ல் அண்ணாவும் கலைஞரும் அந்த தீப்பந்தத்தை தொடர்ந்து ஏந்தினர்
திமுகவின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக திரைப்படங்களும், அதில் ஒலித்த சீர்த்திருத்தக் கருத்துகளும், கூர்மைமிக்க அண்ணா, கலைஞரின் வசனங்களும், உணர்ச்சிகரமாக நடித்த சிவாஜி, எம் ஜி ஆர், எஸ்.எஸ் ராஜேந்திரன், கே ஆர் ராமசாமி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் என எண்ணற்ற நடிக நடிகையரும் ஒரு காரணம். அத்துடன் அந்தக் காலத்தில் பத்திரிக்கை படிக்கும் பழக்கம் அனைவரிடத்தும் இருந்தது. திமுகவிலிருந்து 300-க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் அதன் முன்னணித் தலைவர்களால் நடத்தப்பட்டன. சலூன் கடைகளும், சலவைக் கடைகளும் அரசியல் பேசிப் பழகும் கூடாரங்களாக பயன்பட்டன. மாணவர்கள் மத்தியிலும் அரசியல் பேசப்பட்டது. போராட்டங்களில் அழைத்து வரப்பட்டு அரசியல் உணர்வு ஊட்டப்பட்டது. திறன் மிகு பேச்சாளர்கள் விடிய விடிய பேசிக் கொண்டே இருந்தனர். அவர்களின் வசீகர பேச்சில் கட்டுண்டு கிடந்தது தமிழ்நாடு.
திமுக ஆறு முறை அரசுக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது. பெரும்பாலும் எதிர்க்கட்சியாகவே நீண்ட காலம் செயல்பட்டிருக்கிறது. 13 ஆண்டு வனவாசம் ஏற்பட்டாலும் தொண்டர்களிடம் சோர்வு இல்லாமல் உற்சாகமாக வைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது. எம் ஜி ஆர், வைகோ என இரண்டு பெரும் பிளவுகளை சந்தித்தபோதும், அசராமல் நின்றிருக்கிறது. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்த போதும், நீதிமன்றத்தில் நின்று வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியாவிலேயே மிகப்பெரிய 2 ஜி ஊழல் வழக்கில் கூட விடுதலையாகியிருக்கிறது. மத்திய அரசில் கூட்டணி ஆட்சியில் பங்குபெற்று, தமிழகத்திற்கு தேவையான நலன்களை பெற்றிருக்கிறது. கரும்புள்ளியாய் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து வெற்றி பெற்றது இன்று வரை கறையாகவே பார்க்கப்படுகிறது. மாபெரும் இயக்கத்தை வழிநடத்திச் செல்வதில் உள்ள சௌகரிய, அசௌகரியங்கள் அத்தனையையும் அனுபவித்திருக்கிறது.
இரண்டு இடங்கள் மட்டுமே பெற்ற மிக மோசமான தோல்வியும், 184 இடங்கள் பெற்ற மிகப்பெரிய வெற்றியும், இதுவரை மற்ற கட்சிகள் முறியடிக்க முடியாமல் தான் இன்று வரை இருக்கிறது. ஆரியர்களின் வருணாசிரமதத்துவத்தை எதிர்த்து, இனவெறியர்களின் தமிழ் இன வெறுப்பை கடந்து, ஒரு எளிய பின்புலத்தில் வந்த கலைஞர் குடும்பம் ஆளுகையில் கட்சி இருப்பது, இன்று வரை விமர்சனமாக பார்க்கப்பட்டாலும், முதலாளித்துவக் கட்சிகளில் இது தவிர்க்க முடியாதது என்றே தோன்றுகிறது.
திமுக மாதிரி செய்யாத தவறுக்கும், அவதூறுக்கும், வதந்திக்கும் பழியான கட்சி ஒன்று இந்தியாவில் கிடையாது, சட்டத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளான அதிமுக மீது எந்தக் கேள்வியும், பழியும் இல்லாத போது, திமுக ஒவ்வொரு புரளிக்கும் இன்று வரை பதில் சொல்லிக் கொண்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை.

திமுக குறித்தான எதிர்கால சந்ததியினர் புரிந்து கொள்வதற்கான ஆவணத்தை எல்லாத் தரப்பு தலைவர்களிடமும் கேட்டு வாங்கி இருக்கிறார்கள். இதை அடுத்த தலைமுறைக்கு எப்படி கடத்தப் போகிறார்கள் என்பதில் இருக்கிறது இதன் வெற்றி. பெரும்பாலான கட்டுரைகள் கூறியது கூறல் திரும்பத் திரும்ப
ஒலித்திருக்கிறது. ஒரு குழுவாக எல்லோரிடமும் கட்டுரை பெற்று அதை வரிசைப்படுத்தி எழுதி இருக்கலாம். எழுத்தின் உலகம் மெல்ல மெல்ல அருகி வருகையில், இவற்றை காலவரிசைப்படுத்தி, காணொளிகளாக்கி, சமூக வலைதளங்களில் உலவ விடலாம். இது டிஜிட்டல் உலகம் ஆகவே, அவர்கள் வழி சென்றுதான் அவர்களுக்கு புரிய வைக்க முடியும்.கட்டுரையாளர்களுக்கும், தொகுத்தோர்க்கும், பதிப்பித்தோர்க்கும் வாழ்த்துகள்.
– செ. தமிழ்ராஜ்
செ.தமிழ்ராஜ் எழுத்துலகம்
1)https://maduraiseithi.in/documentary-thiruparankundram-files/
2) https://maduraiseithi.in/book-review-kodaimadam-by-samraj/
3)https://maduraiseithi.in/book-review-thayai-by-seenu-ramasamy/



