பக்தியிசை பரப்பிய பாவலர்கள் 20…நெல்லை அருள்மணி

உஷா உதுப்

இன்றைய இளைய தலைமுறையினர் விரும்பிக் கேட்கும் பாடல்களின் இரைச்சல் காது ஜவ்வு கிழிந்து விடும் போலிருக்கிறது. எப்படி இந்த பாடல்களை இவர்கள் கேட்கிறார்கள்? குறிப்பாக, சாய் அபயங்கர் பாடல்கள் என்றாலே காட்டுக் கத்தலாக இருக்கிறது. அவர் இசையமைத்து பாடிய “அலையே அலையே காட்டுல மழையே” பாடல் வரிகளைக் கவனித்தேன்.

தொட்டா டேய் பட்டாசா
நான் வெடிக்கிற டென் தவுசன்ட் வாலா ஹே
சுத்தாதே புல்லட்டா
நான் தெரிக்கிற
சல் தூ கோன் யே சாலா…

இப்படி தான் அந்த பாடல் துவங்குகிறது. இது தமிழ் பாடலா, இந்தி பாடலா, ஆங்கிலப் பாடலா என்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு திணிக்கப்பட்ட வார்த்தைகளால் தமிழ்ப்பாடல்களின் தரம் பாழ்பட்டு வருகிறது. பால் டப்பா என்பவர் இந்த பாடலை எழுதியுள்ளாராம்!. இப்படி வந்த எத்தனையோ பாடல்கள் மீண்டும் நினைத்துப் பார்க்க முடியாமலே போய் விடுகின்றன. தமிழ்ப் பாடலில் ஆங்கிலம் கலக்கக்கூடாதா என்ற கேள்வி இயல்பாக எழும்.

1975-ம் ஆண்டு குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் மேல்நாட்டு மருமகள் என்ற படத்தில் இரண்டு ஆங்கில பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கமல்ஹாசனும், அவரது முன்னாள் மனைவியுமான வாணி கணபதியும் ஆடும், “ஹெள வொண்டர்புல்” பாடல் ஆங்கில வரிகளுடன் துவங்கி முழுமையான தமிழ்ப்பாடலாக ஒலிக்கும். கமலும், வாணியும் இணைந்து நடித்த ஒரே பாடம் இதுதான். எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் பாடிய இந்த பாடலை உளூந்தூர்பேட்டை சண்முகம் எழுதியிருப்பார்.

இதே படத்தில் உஷா உதுப் பாடிய முழுமையான ஆங்கில பாடல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது.” லவ் இஸ் எ பியூட்டிபுல்” என்ற வரிகளுடன் துவங்கும் இந்த கேபரே வகை பாடலை மிக அற்புதமாக அவர் பாடியிருப்பார். சேலை உடுத்திய உஷா உதுப், கையில் மைக்குடன் கரகரவென்ற குரலுடன் பாடிய இந்த கேபரே வகையான பாடல் இன்றளவும் ரசிக்கப்படுகிறது. இந்த பாடலை எழுதியவர் யார் என்று உங்களுக்கு கேள்வி எழும்.

இவர் தமிழ் திரைப்படங்களில் புகழ்பெற்ற பல பாடல்களை எழுதியவர். எம்.ஜி.ஆர் நடித்த நவரத்தினம் படத்தில் பாலமுரளி கிருஷ்ணா மற்றும் வாணி ஜெயராம் இணைந்து பாடிய புதுமையான ஒரு பாடல் இடம் பெற்றிருக்கும் .”பலுக்கு கண்டா சா கேருகு என்ற பாடல் அந்த தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மேற்கத்திய இசையுடன் ஒலிக்கும். இந்த பாடலையும் மேல்நாட்டு மருமகள் படத்தில் இடம் பெற்ற லவ் இஸ் எ பியூட்டிபுல் பாடலை எழுதிய கவிஞர் தான் எழுதினார். ஓ. இவர் இப்படிப்பட்ட பாடல்களா எழுதுபவர் என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள்.

டி.ஆர்.மகாலிங்கம்

இசைத்தமிழ் என்று போற்றப்பட்ட டி.ஆர்.மகாலிங்கம் பாடிய “முழுமுதற் பொருளே முத்தமிழ்ச் சுடரே மோனமே வேதநாயகனே” என்ற புகழ்பெற்ற பாடலையும் அந்த கவிஞர் தான் எழுதினார். அகத்தியர் படத்தில் இடம் பெற்ற இந்த பாடல், டி.ஆர்.மகாலிங்கத்தின் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்றாகும். சிவாஜி கணேசன், உஷா நந்தினி நடித்த பொன்னுஞ்சல் படத்தில் இவர் எழுதிய ஒரு வித்தியாசமான பாடல் இடம் பெற்றுள்ளது.

பி.வசந்தா

முத்துச்சரம் சூடி வரும்
வள்ளிப் பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுப்பேன்
செல்ல கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு வச்ச கோலமெதற்கு
என் அத்தை மவ முத்தம் தர காலம் எதற்கு…

என்ற இந்த பாடலை டி.எம்.சௌந்தரராஜன் பாடியிருப்பார். ஆனால், இந்த பாடல் முழுவதும் பெண் குரல் பாடுவதற்குப் பதில் பாடல் முழுவதும் ஹம்மிங் மட்டும் தான் இடம் பெற்றிருக்கும். அந்த வித்தியாசத்தை செய்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். அப்படியான ஹம்மிங் குரலுக்குச் சொந்தக்காரர் ஹம்மிங் குயின் என்று போற்றப்பட்ட பி.வசந்தா. இந்த புகழ் பெற்ற பாடலை எழுதியவர் “லவ் இஸ் எ பியூட்டிபுல்” பாடலை எழுதிய கவிஞர் தான்.

ஏரை கண்டால் வீரன் உள்ளம்
தேரை கண்டார் போல் ஆடும்
நீரை கண்டு நெல்லும் கண்டால்
நெஞ்சம் எங்கும் தேனோடும்…

என்று விவசாயத்தை போற்றிப் புகழ்ந்து சிவாஜி கணேசன், மஞ்சுளா நடித்த அவன் ஒரு சரித்திரம் திரைப்படத்தில் பாடலை எழுதியவரும் அந்த கவிஞர் தான். எம்.எஸ்.விஸ்வநாதன் பாடிய அந்த டைட்டில் பாடலின் வழியே படத்தின் கதையைச் சொல்லியிருப்பார் அந்த கவிஞர் காவல் தெய்வம், வா ராஜா வா, தோடி ராகம் உள்பட பல்வேறு படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். திரைப்படங்களில் முத்திரைப் பாடல்கள் பலவற்றை எழுதிய இந்த கவிஞரை பக்தி இசை உலகம் கொண்டாட மறந்து போனது. ஏனெனில், அவர் எழுதிய பக்திப் பாடல்கள் அனைத்தும் புகழ் பெற்றவை. முருகன் குறித்து எத்தனையோ பாடல்களை சூலமங்கலம் சகோதரிகள் பாடியுள்ளனர். அவர்கள் பாடிப்புகழ் பெற்ற ,

அழகெல்லாம் முருகனே
அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே
தெய்வமும் முருகனே…

என்ற பாடலுக்குச் சொந்தக்காரர் நெல்லை அருள்மணி.

நெல்லை அருள்மணி

சின்னஞ்சின்ன சொற்களைக் கொண்டு அற்புதமான பாடல்களை வடித்தெடுத்த நெல்லை அருள்மணி. சரவணப் பொய்கையில் உதித்த முருகனுக்கு தாலாட்டு பாடல் ஒன்றையும் அருள்மணி எழுதியுள்ளார். சூலமங்கலம் ஜெயலட்சுமி, சூலமங்கலம் ராஜலட்சுமி பாடிய

நெற்றிக்கண்ணில் உதித்தவனே தாலேலோ
வெற்றி தரும் வேலவனே தாலேலோ
குன்றத்தில் நின்றவனே தாலேலோ
நன்றாக அருள் செய்வாய் தாலேலோ
தாலேலோ குமரா தாலேலோ
தாலேலோ குமரா தாலேலோ…

பாடலைக் கேட்க கேட்க உறக்க நிலைக்கு நாமும் ஆட்படுவோம். அவ்வளவு இனிமையான மெட்டில் இரட்டை சகோதரிகள் இசை வழங்கிய இந்த பாடலைப் பாடியுள்ளனர். பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் நிறைய பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார். குறிப்பாக அவர் பாடிய பாடல்களில் இருக்கும் இனிமை மெல்லிசையை ரசிப்பவர்களுக்கு தேனில் குழைத்த பலா. நெல்லை அருள்மணி எழுதிய இந்த பாடலும் அந்த வகையைச் சேர்ந்தது தான்.

ஆறுமுகம் செய்தவன் ஆறுமுகன்
ஆறுமுகன்
அறிமுகம் செய்தவன் ஆறுமுகன்
அறிமுகம் செய்தவன் ஆறுமுகன்
அருள் ஆனந்தம் தருபவன் ஆறுமுகன்
என்னை அறிமுகம் செய்தவன் ஆறுமுகன்
ஆறுமுகன்

மோர்சிங், கஞ்சிரா, தபேலா போன்ற சிறிய இசைக்கருவிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பாடலில் இசைமணி சீர்காழி கோவிந்தராஜன் நடத்தும் இசைக்கச்கேரியை கேட்டுக் கொண்டே இருக்கலாம். சீர்காழி கோவிந்தராஜன் பாடிய கற்பக களிறின் பொற்பதமே நாடு, மகன் சீர்காழி சிவசிதம்பரத்துடன் பாடிய அபிஷேகம் அலங்காரம் முருகனுக்கு ஆகிய பாடல்களை நெல்லை அருள்மணி எழுதியுள்ளார். வாணிஜெயராம் பாடிய புகழ் பெற்ற அம்மன் பாடலை அருள்மணி எழுதியுள்ளார்.

கடைக்கண் பார்வையிலே காமாட்சி…
கருதும் நலம் தருவாள் காமாட்சி
விடையவன் இட்செல்வம் காமாட்சி
வெற்றிக்கு சுடராகும் காமாட்சி…

என்ற இந்த பாடலுக்கு கலைமாமணி கே.வீரமணி- சோமு இசையமைத்துள்ளனர். ஐயப்பனுக்கு விரதமிருந்து கோயிலுக்குச் செல்பவர்கள் 108 சரண கோஷத்தை முழங்குவார்கள். ஒவ்வொரு வரிகளும் அவர்களுக்கு மனப்படமாக இருக்கும். அப்படி சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு பாடல் மனப்பாடமாக இருக்கிறதென்றால், அது நெல்லை அருள்மணியின் இந்த பாடல் என்று தாரளமாக சொல்லலாம்.

கே.வீரமணி

சாமியே… ஐ
சரணம் ஐயப்போ
சரண‌ கோஷப்பிரியனே
சரணம் ஐயப்போ
சரணம் விளித்தால் மரணம் இல்லை
சாஸ்தா நாமம் அருளின் எல்லை
தருணம் இதுதான் சரணம் போடு
தர்ம‌ சாஸ்தா பாதம்பாடு

சரணம் விளித்தால் மரணம் இல்லை
சாஸ்தா நாமம் அருளின் எல்லை…

காக்கும் தெய்வம் திருமால் நாமம்
கருணை செய்யும் ஈஸ்வர‌ நாமம்
கலந்து மகிழ்ந்த‌ ஐயன் நாமம்
கூவி வந்தால் புவியில் ஷேமம்

கலைமாமணி கே.வீரமணி பாடிய இந்த பாடலில் சபரிமலை செல்லும் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்து அருள்மணி பட்டியல் இட்டிருப்பார். சரிகம யூடிப் சேனல் பதிவேற்றம் செய்த இந்த பாடலைக் கேட்டு மகிழ்ந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 5 லட்சத்து 60 ஆயிரத்து 778 பேர் என்றால் இந்த பாடலின் வலிமையை அறிய முடியும். ஐயப்பனின் புகழ்பாடும் மற்றொரு புகழ்பெற்ற பாடலையும் நெல்லை அருள்மணி எழுதியுள்ளார்.

அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா
ஆதி ஞான ஜோதியப்பா ஐயப்பா
இருக்கும் வாழ்க்கை சிறக்க வைக்கும் ஐயப்பா
ஈர்க்கும் காந்தமலையப்பா ஐயப்பா…

என்ற அந்த பாடலை கே.வீரமணி பாடியுள்ளார். அவர் பாடிய ஓங்கும் மலை எங்கும், ஐயப்பன் கவசம், ஓங்கார நாதத்தில், பந்தாட்டம் ஆடி வரும் ஆகிய பாடல்களையும் நெல்லை அருள் மணி எழுதியுள்ளார். ராதாவுடன் இணைந்து கே.வீரமணி பாடிய கற்பகம் அருளாமல் கற்பவை பலம் தருமா என்ற பாடலும் அருள்மணி எழுதியது தான்.

பி.சுசீலா பாடிய அம்மன் பாடல்களின் தொகுப்பான ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா ஆல்பத்தில் இடம் பெற்ற புகழ்பெற்ற பாடலை அருள்மணி எழுதியுள்ளார். குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் பி.சுசீலா பாடிய

காட்சி தந்து என்னை ஆட்சி செய்தாய் அம்மா…
கல்யாணியே கற்பகமே…
அற்புத காட்சி தந்து என்னை ஆட்சி செய்தாய் அம்மா…

பாடல் பதிவு செய்யப்பட்டு முப்பது ஆண்டுகளுக்கு மேலாகிறது. இந்த பாடல் இன்று வரை அனைவராலும் விரும்பக் கூடிய பாடலாக திகழ்கிறது. பத்மஸ்ரீ டி.எம்.சௌந்தரராஜன் பாடிய பாடவைத்தான் அந்த பழனியப்பன். அருள் வடிவான கற்பகமே, அருளின்றி உலகினில் அமைதி உண்டோ, மேனி ஒரு செம்பவளம் மேல் முழுதும் வெண்நீறு ஆகிய பாடல்களை நெல்லை அருள்மணி எழுதியுள்ளார். இதில் பெரும்பாலானவை 1958-ம் ஆண்டு எழுதப்பட்ட பாடல்களாகும். டி.ஆர்.பாப்பா இசையில் டி.கே.கலா பாடிய ஐயப்பனின் கோவில் நெய் விளக்கு அடியவர் உள்ளத்தில் மெய்விளக்கு, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய விரதம் இருக்கும் ஐயப்பா ஐயப்பா ஆகிய பாடல்கள் நெல்லை அருள்மணியின் கற்பனையில் உருவானவை தான்.

மனோகர் இசையில் மின்மின் பாடிய திருவிளக்கு, ஜீவிதம், ஓம்காரி ரீங்காரி, கண்ணியாகி, இமையவன்,ஆடியும் ஆனந்தமும், வேப்பிலை,ஆனந்த தேனிசை, சிங்கார மதுரையிலே, நடம், காயாகி, அமுதா நிலையம். ஆகிய பாடல்களை நெல்லை அருள்மணி எழுதியுள்ளார். அம்மன் பாடல்கள் மூலம் புகழ்பெற்ற எல்.ஆர்.ஈஸ்வரியின் புகழ்பெற்ற பாடல் ஒன்றை நெல்லை அருள்மணி எழுதியுள்ளார்.

எல்.ஆர்.ஈஸ்வரி

நோயற்ற வாழ்வு குறையற்ற செல்வமும்
நூற்றாண்டு புகழும் தூற்றாத மனமும்
நேயர்கள் பெற்றுள்ள தாயே எங்கள் கருமாரி
நீயே அருள்புரிவாய் நிமலியே ஈசன் கமலியே தேவி
… என்ற தொகையறாவுடன் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய

காலத்தின் அருளம்மா கருமாரி அம்மா
கைதொழும் அன்பர்கள் மெய்புகழ் எய்திட
மூலப் பொருளாக ஞானம் கனியவரும்
மோகன தெய்வமே ஆவன தேவியே
.. என்ற இந்த இனிமையான பாடலுக்கு இசை மீட்டியவர்கள் கே.வீரமணி- சோமு. திரைப்படத்துறையில் இருந்து கொண்டே பக்தியிசை உலகில் தனது முத்திரை கொடியை பறக்க விட்டவர் நெல்லை அருள்மணி என்பது மட்டும் நிஜம்.
ப.கவிதா குமார் ( நினைவுகள் சுழலும் )

இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *