
கேரளாவின் திருச்சூரில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த 8 பொறியியல் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர்.
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-66-ல் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில், தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு பொறியியல் மாணவர்கள் நேற்று நள்ளிரவில் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் கேரளாவுக்கு காரில் சென்றனர்.குருவாயூரிலிருந்து கொடுங்கல்லூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது திருச்சூர் கைப்பமங்கலத்தில் உள்ள பனம்பிக்கு என்ற இடத்தில் அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி மீது இரவு 11.40 மணியளவில் கார் மோதி அப்பளம் போல நொறுங்கியது.
இதனால் காரில் இருந்த மாணவர்கள் 6 பேர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற இருவர் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். நசுங்கிய காரிலிருந்து மாணவர்களை மீட்கும் பணியில் அப்பகுதி மக்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டனர். பின்னர், உடல்கள் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனை அறைக்குக் கொண்டு செல்லப்பட்டன. உயிரிழந்தவர்கள் சேலத்தைச் சேர்ந்த விஸ்வா, திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யா, யுவசஞ்சித், மதுரையைச் சேர்ந்த சந்தோஷ், பிரசன்னா ஆகிய மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களின் உடல்களிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மாணவர் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி காவல்துறையினர் அவர்களது குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டனர். தங்கள் பிள்ளைகள் கேரளாவுக்குச் சென்றிருந்தது சில குடும்பங்களுக்குத் தெரியாது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கைபமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விபத்திற்கு காரணமான லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் திருச்சூர் மருத்துவக் கல்லூரிக்கு வந்தடைந்த பிறகு உடற்கூறாய்வு நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி மீது கார் மோதியதன் பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதேநேரம், போதிய தெரு விளக்குகள் இல்லாததும், லாரி நிறுத்தப்பட்ட பகுதியில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படாததுமே விபத்துக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.



