
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திடீர் திருப்பமாக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என நான்கு முனைப்போட்டி இந்த தேர்தலில் ஏற்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக இந்த தேர்தலில் எந்த கட்சியுடன் இணையும் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில மாதங்களாகவே நீடித்து வருகிறது. அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக சேரும் என பாஜக தலைவர்கள் கூறி வந்தனர். ஏனெனில், கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கவில்லை. எனவே, அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக சேரும் என்று கூறப்பட்டது. ஆனால், திமுக கூட்டணியில் தேமுதிகவை இணைக்க அமைச்சர் எ.வ.வேலு தொடர்ந்து முயற்சி எடுத்து வந்தார்.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை, தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா, பொருளாளர் சுதீஷ் உள்ளிட்டோர் இன்று (பிப்ரவரி 19) சந்தித்துப் பேசினர். இந்த பேச்சுவார்த்தையில், திமுக கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதி செய்யப்பட்டது. மு.க. ஸ்டாலினுக்கு சுதீஷ் பொன்னாடை போர்த்தினார். கூட்டணியில் இணைந்த தேமுதிகவை வரவேற்கும் வகையில், பிரேமலதாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்பைத் தெரிவித்துள்ளார். தேமுதிக வருகையின் மூலம் திமுக கூட்டணி மேலும் வலுவடைந்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.



