
தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ்.
படப் பிரச்னை, சிபிஐ விசாரணை என பாஜக அழுத்தம் கொடுத்து வருகிறது என்று தவெக கொள்கை பரப்புச் செயலர் அருண்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக மதுரையில் அவர் இன்று (பிப்ரவரி 20) செய்தியாளர்களிடம் கூறுகையில், தவெகவிற்கு மதுரை மட்டுமல்லாது தமிழக முழுவதிலும் பெருகிவரும் ஆதரவால் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது தவெகவின் கொள்கை முடிவு. இதனை முதல் மாநாட்டிலேயே விஜய் அறிவித்தார். கூட்டணிக்கு கட்சிகள் வருவார்கள் என்று எதிர்பார்த்து இதை அறிவிக்கவில்லை.
திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை, திமுக ஆட்சியின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ள நேரத்தில் தோல்வி அடையும் கட்சியோடு தேமுதிக சேர்ந்து இருப்பதால் அவர்களும் தோல்வி அடைவார்கள். கூட்டணி குறித்த முடிவுகளை தவெக தலைவர் எடுப்பார். தமிழ்நாட்டில் 90 சதவீத மக்கள் தவெகவிற்கு ஆதரவாக உள்ளனர். இளைஞர்களை அரசியல் நோக்கி இழுத்தது தவெக தான்.
தேர்தல் கூட்டணி அமைப்பது பிப்ரவரி 22-ம் தேதி தான் என திமுக அறிவித்தது. ஆனால், தற்போது அவசரமாக தேமுதிகவை உள்ளே கொண்டு வந்ததன் காரணம் என்ன? திமுகவிற்கு தேர்தல் பயம் வந்துவிட்டது என்பதை தான் இது காட்டுகிறது. ஆளும் திமுகவிற்கு கூட்டங்கள் நடத்த உடனடியாக அனுமதி கிடைக்கிறது. ஆனால் தவெகவிற்கு நூற்றுக்கணக்கான விதிமுறைகள், அனுமதி மறுப்பு என தடைகளை ஆளுங்கட்சியினர் செய்கின்றனர்.
தனது முதல் மாநாட்டிலேயே கொள்கை எதிரி, அரசியல் எதிரி என இரண்டு கட்சிகளை தவெக தலைவர் விஜய் அறிவித்துவிட்டார். இதனால் பாஜக பல்வேறு அழுத்தங்களை கொடுக்க முயற்சி செய்தது. படப்பிரச்னை, சிபிஐ விசாரணை என அழுத்தம் கொடுத்து வருகிறது. மதவாத சக்தியுடன் கூட்டணியில்லை என ஏற்கெனவே விஜய் அறிவித்து விட்டார்.. தவெகவின் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது” என்றார்.



