காரைக்குடியில் களமிறங்கிய சீமான்- 234 வேட்பாளர்கள் அறிமுகம்

சீமான்

நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிடுகிறார்.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில், திருச்சி மாவட்டம், ஆலம்பட்டிபுதூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு இன்று (பிப்ரவரி 21) நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஒரே மேடையில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 117 பெண், 117 ஆண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். 234 தொகுதிகளில் 40 பொறியாளர்கள், 70 வழக்கறிஞர்கள், 18 மருத்துவர்கள், 22 முனைவர்கள், இடம் பெற்றுள்ளனர். தனது சொந்த மாவட்டமான சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிடுகிறார்.

இடும்பாவனம் காா்த்திக் நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதியிலும், திரைப்பட இயக்குநர் களஞ்சியம், ஆயிரம்விளக்கு தொகுதியிலும், வீரப்பன் மகள் வித்யாராணி மேட்டூர் தொகுதியிலும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். கடந்த நாடாளுமன்றத் தோ்தலில் தமிழகத்தில் அதிகபட்சமாக சிவகங்கை தொகுதியில் 16.81 சதவீத வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றதுடன் டெபாசிட் பெற்றது. காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி 14.80 சதவீத வாக்குகளைப் பெற்றது. அந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *