தமிழகத்தை உலுக்கிய டாக்டர் சுப்பையா கொலை வழக்கு: 9 பேரின் விடுதலை ரத்து

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பில்ரோத் மருத்துவமனை அருகே டாக்டர் சுப்பையா(58) கடந்த 2013 செப்டம்பர் 14-ம் தேதி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து காருக்குச் சென்ற அவரை ஒரு மர்மக்கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில் 27 இடங்களில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட டாக்டர் சுப்பையா, 2013 செப்டம்பர் 23-ம் தேதி உயிழந்தார். அவர் படுகொலை செய்யப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டாக்டர் சுப்பையா மனைவியின் தாயார் அன்னபழத்துக்கு சொந்தமான நிலம் தொடர்பான பிரச்னையில் இந்த கொலை நடந்ததாக கூறப்பட்டது. மேலும், அன்னபழத்தின் மகன் பொன்னுசாமி இந்த சதியில் ஈடுபட்டது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பொன்னுசாமி, அவரது மனைவி மேரி புஷ்பம், மகன்கள் பேசில், போரிஸ் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். கடந்த 2021-ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 7 பேருக்கு மரண தண்டனையும், 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்தது.

சொத்து தகராறு, சதித் திட்டம், சிசிடிவி ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து 2024-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்றம், “விசாரணை நீதிமன்றம் ஆதாரங்களை சரியாக மதிப்பிடவில்லை. அரசு தரப்பு சாட்சியங்களை நம்ப முடியவில்லை. மரண தண்டனை விதிப்பதில் சட்ட விதிமுறைகளை பின்பற்றவில்லை. வழக்கு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி 9 பேரையும் விடுதலை செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மற்றும் டாக்டர் சுப்பையா குடும்பத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பட்டப்பகலில் நடந்த பயங்கர கொலையில் குற்றவாளிகளை எப்படி விடுவிக்கலாம் என்று கேள்வி எழுப்பிய நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு இன்று (மே 19) இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், குற்றவளிகள் அனைவரையும் விடுதலை செய்து உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *