
கோவையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்றது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்ற இந்த தேர்தல் குறித்து ஆலோசனை செய்வதற்காக கோவை பீளமேட்டில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் நேற்று (ஏப்ரல் 29) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாஜக தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அர்ஜூன மூர்த்தி, கே.டி.ராகவன், கருப்பு முருகானந்தம், எஸ்.ஆர்.சேகர், கனகசபாபதி, ஏ.பி.முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்த்து பி.எல்.சந்தோஷை முன்னாள் மாநில தலைவர் தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேசினர். அப்போது தேர்தல் பணியில் ஏற்பட்ட பிரச்னை, வாக்கு எண்ணிக்கையின் போது செய்ய வேண்டிய பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிலையில், சட்டமன்ற ஆலோசனை கூட்டத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. அதிமுக உடனான தொகுதிப் பங்கீட்டில் அதிருப்தி மற்றும் கோவையில் தான் போட்டியிட விரும்பிய தொகுதி கிடைக்காதது போன்ற காரணங்களால் அண்ணாமலை தேர்தலில் போட்டியிடவில்லை. அத்துடன் கட்சி சார்பாக சில நிகழ்வுகளிலும் அண்ணாமலை பங்கேற்கவில்லை. ஆனால், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆலோசிக்க டெல்லியில் இருந்து முக்கிய தலைவர்கள் கோவைக்கு வந்துள்ள சூழ்நிலையில், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலை கூட்டத்தில் பங்கேற்காமல் வெளியூர் சென்று விட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



