ஜோதிடர் நியமனத்தை திரும்ப பெற வேண்டும்: விஜய்க்கு தமுஎகச வலியுறுத்தல்

முதலமைச்சரின் சிறப்புப் பணி அலுவலராக ஜோதிடர் நியமனம் செய்ததை திரும்பப் பெற வேண்டும் என்று தமுஎகச வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யின் ஜோதிட ஆலோசகரும், தவெக செய்தித் தொடர்பாளருமான ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “முதலமைச்சரின் சிறப்புப் பணி அலுவலராக (அரசியல்) ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்படுகிறார். இந்த ஆணை இன்று முதல் அமலுக்கு வருகிறது” என கூறப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான தமிழ்நாடு அரசு, மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் என்னும் ஜோதிடரை நியமனம் செய்துள்ளது. இந்த நியமனத்தை உடனே திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

இந்திய அரசியல் சாசனத்தின் 51A பிரிவு, ‘ நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் விதிக்கப்பட்டுள்ள மிக முக்கியமான அடிப்படைக் கடமைகளுள் ஒன்றாக அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்; என்று கூறுகிறது. தமிழக அரசின் இந்தச் செயல் அரசியல் சாசனத்திற்கு நேர் எதிரான நடவடிக்கை ஆகும். மக்களின் வரிப்பணத்தில் ஒரு சோதிடருக்கு ஊதியம் வழங்கி உயர் பொறுப்பு கொடுப்பது, அரசியல் சாசனத்தை கேலிக்குள்ளாக்கும் செயலாகும். இந்திய அரசியல் சாசனம் வழிகாட்டியபடி, தமிழ்நாட்டில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகத் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல முற்போக்கு அமைப்புகள் கடந்த பல ஆண்டுகளாகக் கோரி வருகின்றன.

கடந்த கால அரசுகளும் மூடநம்பிக்கையை ஒழிக்கத் தனிச்சட்டம் இயற்றவில்லையே தவிர, ஒரு நாளும் மூடநம்பிக்கையை வளர்ப்பவர்களை அரசின் ஆலோசனைக் குழுவிலோ, உயர் பொறுப்புகளிலோ நேரடியாக நியமித்ததில்லை. அதோடு மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள், ‘தனது அரசு ஒரு மதச்சார்பற்ற அரசாக செயல்படும்’ என்று உறுதியளித்தார். தனக்கு ஆதரவளித்த கூட்டணிக் கட்சிகளிடமும் அதே உறுதியைக் கொடுத்துள்ளார். அவரை நம்பி வாக்களித்த வாக்காளர்களும் அதையே விரும்புகிறார்கள். ஆனால் இந்த நடவடிக்கை அவருக்கு வாக்களித்த வாக்காளர்களிடமும், அவரை ஆதரித்த கூட்டணிக் கட்சிகளிடமும் பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.

முதலமைச்சரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு மற்றும் நம்பிக்கைகள் அரசின் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகளில் ஒரு நாளும் வெளிப்படக்கூடாது என்றும் வலியுறுத்துகிறோம்.ஆகவே இந்த நியமனத்தை அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் எனவும், அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் நோக்கில் மக்களிடையே செயல்பட்டு வரும் அமைப்புகளும் இந்த நியமனத்திற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *