
திருவாரூரில் வீடு புகுந்து தொலைக்காட்சி செய்தியாளர் மீது கஞ்சா கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் பஷீர் அகமது. இவரது மகன் ஹாஜா மொகைதீன்(38). இவர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பகுதிநேர செய்தியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு பணி முடிந்து ஹாஜா வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துசிறை சென்று ஜாமீனில் வெளிவந்த அப்துல் பாசித் தலைமையிலான மூன்று பேர் கொண்ட கும்பல் ஹாஜா மொகைதீன் வீட்டுக்குள் புகுந்துள்ளது. மது பாட்டிலால் ஹாஜா மொகைதீன் தலையில் அடித்து உடைத்துள்ளனர். அத்துடன் உடைந்த கண்ணாடி பாட்டிலால் அவரை பல இடங்களில் சரமாரியாக குத்தி விட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஹாஜா மொகைதீனை அவரது குடும்பத்தினர் முத்துப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவிக்குப் பின் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்
முத்துப்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்பாக செய்தி வெளியிட்ட ஆத்திரத்தில் ஹாஜா மொகைதீன் மீது இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். வீடு புகுந்து செய்தியாளர் மீது கஞ்சா கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



