
பச்சை பட்டுடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்வில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 28-ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவமும், ஏப்ரல் 29-ம் தேதி திருத்தோரோட்டமும் நடந்தது. இந்த நிலையில் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக நேற்று முன் தினம் மாலை 6.15 மணிக்கு அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் கோலத்தில் அழகர் மதுரை நோக்கி தங்கப்பல்லக்கில் புறப்பட்டார்.
மதுரை மூன்றுமாவடியில் நேற்று அதிகாலை 5.30 முதல் 6.30 மணிக்குள் கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு கள்ளழகரை தரிசித்தனர். இதையடுத்து மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர் நேற்று இரவு 11 மணி முதல் 11.59 மணிக்குள் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் திருமஞ்சனம் முடிந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார்.
இதைத் தொடர்ந்து சித்ரா பௌர்ணமி நாளான இன்று (மே 1) அதிகாலை 5.35 மணி முதல் 5.55 மணிக்குள் பச்சை பட்டுடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்குள் அழகர் எழுந்தருளி அருள்பாலித்தார். அப்போது வைகை ஆற்றின் இரண்டு பக்கம் கரைகளில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய கோவிந்தா முழக்கம் விண்ணைப் பிளந்தது.
தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவால் மதுரையே விழாக்கோலம் பூண்டுள்ளது. இன்று பிற்பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறும். பிறகு இரவு 9 மணிக்கு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் அழகர் எழுந்தருளுகிறார்.



