
தமிழ்நாட்டில் உள்ள 5 தொகுதிகளின் இடைத்தேர்தல் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல்களுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியது.
இந்த நிலையில் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கக் கூடாது என கடந்த ஜூலை 10-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ஐந்து தொகுதிகளிலும் தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால், இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை தடுக்கும் வகையில் திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். வழக்கின் சாராம்சத்தை உணர்ந்து, உயர்நீதிமன்ற நீதிபதிகளும் ஜூலை 31-ம் தேதி வரை இடைத்தேர்தல் தேதியை அறிவிக்க தடை விதித்தனர்.
இந்நிலையில் எனது தரப்பு வாதங்களை கேட்காமல், எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என மனுதாரர் வெங்கடாஜலபதி டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் வெங்கடாஜலபதி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் இடைத்தேர்தல் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டால் அந்த மனுவின் விசாரணையின் போது தனது தரப்பு கருத்தைக் கேட்காமல் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்ககூடாது என வலியுறுத்தியுள்ளார்.



