
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் நேற்று பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. எழும்பூர் சட்டமன்ற உறுப்பினராக விஜய் என்ற சி.ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். இதன் பின் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
சட்டப்பேரவை கூட்டம் முடிந்ததும் கான்வாய் வாகனத்தில் முதலமைச்சர் விஜய், சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்துக்கு சென்றார். அவரது வருகையை முன்னிட்டு முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் அங்கு வந்திருந்தனர். விஜய் வீட்டிற்கு வந்ததும் உதயநிதி ஸ்டாலின் ஆரத்தழுவி வரவேற்று அழைத்துச் சென்றார். இதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும் விஜய்யை கட்டியணைத்து வரவேற்றார். இதன் பின் விஜய், மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின், “காலத்தின் நிறம் கருப்பு, சிவப்பு” என்ற நூலை பரிசாக வழங்கினார். இதன் பின் அங்கிருந்து சென்னை அண்ணாநகரில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீட்டிற்கு முதலமைச்சர் விஜய் சென்று வாழ்த்துப் பெற்றார். ஆட்சி பொறுப்பேற்ற இரண்டாவது நாளே திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை நேரில் சந்தித்து விஜய் வாழ்த்து பெற்றது அரசியல் நாகரீகமாக கருதப்படுகிறது.



