
தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனா உள்பட 5 பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனா உள்பட 5 பேரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இவர்களில் வி.மோகனா என்பவர் வழக்கறிஞராக இருந்து நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்படும் இரண்டாவது பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று மத்திய சட்டத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் அடிப்படையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஷீல் நாகு, மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், மத்திய பிரதேசம் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவி சச்தேவா, ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அருண் பல்லி, தமிழ்நாட்டின் கோவையைச் சேர்ந்த மூத்த பெண் வழக்கறிஞர் வி.மோகனா ஆகியோரை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (ஜூன் 1) உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2021- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் உச்சநீதிமன்றத்தில் ஒரே ஒரு பெண் நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டுமே இருக்கும் நிலையில், தற்போது இந்த நியமனத்தின் மூலம் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள வி.மோகனா கோவை சட்டக்கல்லூரியில் படித்தவர்.
முன்னாள் மத்திய அமைச்சர்களும், மூத்த வழக்கறிஞர்களுமான கபில்சிபல், ப.சிதம்பரம், அருண்ஜெட்லி, மூத்த வழக்கறிஞரும், மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான கே.கே.வேணுகோபால், மூத்த வழக்கறிஞர் அந்தியாருஜினா ஆகியோருடன் வி.மோகனா பணியாற்றியுள்ளார்.இவர் 2031 ஜூன் வரை உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் வாழ்த்து
உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி. மோகனாவுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நீதித்துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து, கோவையில் தனது வழக்கறிஞர் பணியைத் தொடங்கி தற்போது உச்சநீதிமன்ற நீதிபதி பொறுப்பை ஏற்றுள்ள அவருக்கு முதலமைச்சர் தனது வாழ்த்துச் செய்தியில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.



