
தவெக ஆட்சி அமைப்பதற்கு விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டுமென இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அக்கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. இதனால் தவெகவின் ஆதரவு பலம் 113 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலையில், விடுதலைச்சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று தவெக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தவெக ஆட்சி அமைப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,” தவெக ஆட்சி அமைப்பதற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும். சகோதரனாக, தந்தையாக விஜய்யை அவர்கள் வழி நடத்த வேண்டும்.
தவெக ஆட்சி அமைப்பதற்கு இவர்கள் ஆதரவு அளிக்காவிட்டால் தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி வரும் அல்லது வேறு மாற்று கட்சியை விஜய் அணுகுவார்.அதற்கு இடம் தராமல் மக்கள் பெரும்பான்மையாக ஏற்றுக்கொண்ட விஜய்க்கு, பாஜக பக்கம் போகாத விஜய்க்கு விசிக, கம்யூனிஸ்ட் ஆதரவு அளிக்க வேண்டும். அந்த கட்சிகள் காலம் தாழ்த்துவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல. தவெக தலைமையில் ஆட்சி அமைப்பது காலத்தின் அவசியம்” என்றார்.



