
கரப்பான்பூச்சிகளிடம் யாரும் மோத வேண்டாம் என்று அந்த கட்சியின் நிறுவனத் தலைவர் அபிஜித் தீப்கே கூறியுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு புகார்களுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் 35 நாட்களுக்கும் மேலாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர். போலீஸாரின் அடக்குமுறையையும் மீறி லட்சக்கணக்கான மாணவர்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக இந்திய முழுவதும் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் மாணவர்களின் எழுச்சிப் போராட்டத்திற்கு தர்மேந்திர பிரதான் தனது மத்திய அமைச்சர் பதவியை இன்று (ஜூலை 25) ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.டைபாய்டு பாதிப்பால் உடல்நலன் பாதிக்கப்பட்ட நிலையிலும் போராட்ட மேடையில் ஏறிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவன தலைவர் அபிஜித் தீப்கே உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், ” மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமா மாணவர் சக்திக்கும், ஜனநாயகத்திற்கும் கிடைத்த இமாலய வெற்றி.நாங்கள் சாதித்துக் காட்டி விட்டோம். தர்மேந்திர பிரதான் ஒரு வழியாக பதவி விலகி விட்டார். இந்த ஆட்சியில் யாரும் ராஜினாமா செய்ய மாட்டார்கள் என்று பலரும் கூறினார்கள். ஆனால், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயப்படாமல் உறுதியாக நின்று, இந்த அரசிடம் பணிய மறுத்தால், யாரை வேண்டுமானாலும் ராஜினாமா செய்ய வைக்க முடியும் என்பதற்கு இந்த வீழ்ச்சியே சாட்சி. உலகம் பணியும், பணிய வைக்க ஆள் வேண்டும். ஜனநாயகம் வென்றுள்ளது. நினைவில் கொள்ளுங்கள், கரப்பான்பூச்சிகளிடம் யாரும் மோத வேண்டாம்” என்று தெரிவித்தார்.



