
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக போட்டியிட்டது. அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் விஜய், மே 10-ம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று கொண்டார். சட்டமன்றத்தில் நேற்று (மே 13) நடைபெற்ற நம்பிக்கை வாக்கு எடுப்பிலும் தமிழக வெற்றிக் கழகம் 144 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.
இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், கடந்த 10-ம் தேதி முதல் திருச்சி கிழக்கு தொகுதியை காலியாக அறிவித்துள்ளது. தற்போது திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக வெளியிடப்பட்ட அரசிதழில் சட்டப்பேரவை சபாநாயகரின் பெயர் அப்பாவு என குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.



