
பொதுக்குழுவை நடத்த பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்ட நடிகர் விஜய்யின் தவெக, 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், ஆட்சியமைக்க அந்த கட்சிக்கு போதுமான எண்ணிக்கையை பெறவில்லை. இதனால் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்ட கட்சிகள் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்தன. இதையடுத்து மே 13-ம் தேதி நடந்த வாக்கெடுப்பில் அதிமுக உறுப்பினர்கள் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 22 சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக வாக்கெடுத்தனர். இதனால் வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றது. இதையடுத்து தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 பேரையும் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கி உத்தரவிட்டார். ஆனால், எடப்பாடி பழனிசாமி எங்களை நீக்கியது செல்லாது என எஸ்.பி.வேலுமணி, சிவி.சண்முகம் தலைமையிலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேட்டியளித்து வருகின்றனர். இதனால் அதிமுக இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன் இன்று ( மே 16) ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது,, சி.வி.சண்முகம் தரப்பு பொதுக் குழு நடத்துவதற்கான கையொப்பம் கேட்டு வந்தால் பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திடக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



