பரபரப்பு… அரசு பள்ளி பூட்டை உடைத்து பறக்கும் படை சோதனை!

நாலாட்டின்புதூரில் உள்ள கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைப்பள்ளி

அரசு பள்ளியில் பூட்டை உடைத்து பணம், பரிசுப் பொருட்கள் பதுக்கப்பட்டதா என பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் வாக்காளர்களுக்கு தருவதற்காக பணம், பரிசுப்பொருட்கள் பதுக்கியிருப்பதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரி சங்கர சுப்பிரமணியன் தலைமையில் குழுவினர் அந்த பள்ளிக்கு விரைந்தனர். அப்பள்ளியின் தலைமையாசிரியரை அழைத்து பள்ளியைத் திறந்து கோவிபட்டி வட்டாட்சியரான தேர்தல் அதிகாரி அப்பணராஜ் முன்னிலையில் சோதனை செய்தனர்.

இந்த பள்ளியில் சில வகுப்பறைகள், ஆய்வகங்களுக்கு சாவிகள் இல்லை என்றதால், பூட்டுகளை உடைத்து பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த தகவல் அறிந்த திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சியினர் பள்ளியை முற்றுகையிட்டனர். பள்ளி வகுப்பறை சாவிகள் எங்கே போனது என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரமாக இந்த சோதனை நடைபெற்றது. இதன் பின் வெளியே வந்த அப்பணராஜிடம் சோதனை குறித்து கட்சியினர் கேள்வி எழுப்பினர். அனால், ஆட்சியரிடம் அறிக்கை சமர்பிக்கப்படும் என்று அவர் பதிலளித்து விட்டு காரில் ஏற முயன்றார். ஆனால், அரசியல் கட்சியினர் அவர் காரை முற்றுகையிட்டனர். என்ன கைப்பற்றப்பட்டது என்பது குறித்து தகவல் கூறுகங்கள் என்று அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த காவல்துறையினர், போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பள்ளியில் நடத்தப்பட்ட சோதனை குறித்து முறையான தகவல் தெரிவிக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. பறக்கும் படை அதிகாரியின் கார் முற்றுகையிடப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *