
தவெக ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என நடிகை ஸ்ரேயா சரண் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால், ஆட்சி அமைக்க போதுமான சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் தவெக தவித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவிற்கு ஆதரவளித்துள்ளனர். இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் ஆதரவை தமிழக வெற்றிக் கழகம் கோரியுள்ளது. அத்துடன் ஆளுநரின் முடிவை எதிர்த்து தவெக சார்பில் உச்சநீதிமன்றத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்று நடிகை ஸ்ரேயா சரண் வலியுறுத்தியுள்ளார். நடிகர் விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்துள்ள அவர், இன்ஸ்டாகிராமில் தவெகவிற்கு ஆதரவாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “தவெக கட்சி 108 இடங்களை வென்றுள்ளது. அவர்கள் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை மறுப்பது, தமிழ்நாட்டு மக்களின் மக்கள் தீர்ப்பிற்கு இழைக்கப்படும் அவமதிப்பாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட 233 உறுப்பினர்களால் இன்னும் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள இயலாத நிலையில், இது மாநிலத்திற்கு இழைக்கப்படும் அவமானம் மட்டுமல்ல; ஜனநாயகத்திற்கே விழுந்த ஒரு பேரிடியாகும்.” என்ற கமல் சொன்ன செய்தி பதிவை ஸ்ரேயா பகிர்ந்துள்ளார்..



