புதிய முதல்வர் விஜய்க்கு குவியும் நெடுஞ்சாலைத்துறை சங்கங்களின் வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சி.ஜோசப் விஜய்க்கு நெடுஞ்சாலைத்துறையைச் சேர்ந்த சங்கங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளன.

பட்டய பொறியாளர்கள் சங்கம்
இது தொடர்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மு.மாரிமுத்து வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ” தமிழக வரலாற்றில் புதிய மாற்றமாக மக்களைச் சந்தித்து சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று இன்று (மே 10) முதல்வராக பொறுப்பேற்றுள்ள ச.ஜோசப் விஜய் அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நெடுஞ்சாலைத்துறையில் நாளது வரையிலும் தொடர்ந்து வரும் சில நடவடிக்கைகள் மூலம் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுகின்றன. அதனைச் சீர்திருத்தம் செய்யக்கூடிய வகையில் நேர்மையான பொறியாளர்களைக் கொண்டு கீழ்க்கண்ட மாற்றங்களை புதிதாக பொறுப்புள்ள அரசிடம் எதிர்பார்க்கிறோம். அதன்படி
புதிதாக அமைக்கப்படும் சாலைகளின் ஆயுட் காலம் 5 வருடம் முடிந்ததும் நன்றாக இருக்கக்கூடிய சாலைகளை புதுப்பிக்க நிதி ஒதுக்கக்கூடாது. அதற்குப் பராமரிப்பிற்கு மட்டும் நிதி ஒதுக்கினால் போதும். பொறியாளர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றக்கூடாது. வெளிப்படையான பொதுபணிட மாறுதல் ஏற்படுத்த வேண்டும்.

மேலும் நெடுஞ்சாலைத்துறையில் துறை தலைவராக இந்திய ஆட்சிப்பணி (ஐஏஎஸ்) அலுவலர் நிலையில், உருவாக்க வேண்டும். சாலை பாதுகாப்பு தொடர்பான பொருட்கள் கொள்முதலில் தனிக்குழு அமைத்து கொள்முதல் செய்யப்பட வேண்டும். இதுவரைக்கும் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள தரம் சோதிக்கும் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் தமிழகம் முழுவதும் தேவையில்லாமல் பல்வேறு அலுவலகங்களில் பயன்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. அது தொடர்பாக குழு அமைத்து முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை ஆய்வாளர்கள் சங்கம்
இதே போல முதல்வர் விஜய்க்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் (சாலை ஆய்வாளர்கள்) சங்கம் சார்பாக வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.குருசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் 11வது முதல்வராக பொறுப்பேற்றுள்ள சி.ஜோசப் விஜய் அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையில் நடைபெறும் பணிகளை ஆரம்ப நிலையில் மேற்பார்வை செய்திடும் பணியிடமாக திறன்மிகு உதவியாளர்கள் (சாலை ஆய்வாளர்கள்) பணியிடம் இருந்து வருகிறது. இப்பணியிடம் இன்றைய நிலையில் சுமார் 3,000 பணியிடங்கள் நெடுஞ்சாலைத்துறையில் இருக்க வேண்டும். ஆனால், தற்போது 1,000-க்கும் குறைவாகத்தான் உள்ளது.

எனவே, டிஎன்பிஎஸ்சி மூலமாக ஐடிஐ சிவில் டிராப்ஸ்மேன் அல்லது சர்வேயர் கோர்ஸ் தகுதி உள்ள வேலையில்லா இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு 75 சதவீத நேரடி வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். 25 சதவீதம் அரசு விதிமுறைப்படி தகுதியுள்ள சாலைப்பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். மேலும் நெடுஞ்சாலைத்துறையில் துறை தலைவராக இந்திய ஆட்சிப்பணி (ஐஏஎஸ்) அலுவலர் நிலையில், கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *