
மகாத்மா காந்தியை அவமரியாதை செய்யும் வகையில் வீடியோ வெளியிட்ட இன்ஸ்டா பிரபலம் சிம்ரன் படேல் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத்தின் அடாஜன் பகுதியைச் சேர்ந்தவர் சிம்ரன் படேல்(47). இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் பிரபலமானவர்.இவருக்கு இன்ஸ்டாகிராமில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் உள்ளனர். இந்த நிலையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 1-ம் தேதி சிம்ரன் ஒரு ரீல்ஸ் வெளியிட்டுள்ளார்.
அதில், ரூ.500 நோட்டை வைத்து மகாத்மா காந்தியை கிண்டல் செய்து ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், 500 ரூபாய் நோட்டில் உள்ள மகாத்மா காந்தியின் படத்தை ஆபாசமான சைகைகளுடன் சித்தரித்து, ‘ஹேப்பி பர்த்டே காந்திஜி’ என்று பாடியவாறு தனது ஆடைக்குள் திணிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சமூக ஆர்வலர் தர்மேஷ் காமி என்பவர் அளித்த புகாரின் பேரில் சூரத் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி சிம்ரனைக் கைது செய்தனர். இந்த சர்ச்சையைத் தொடர்ந்து அந்த வீடியோவை சிம்ரன் நீக்கியதுடன், தனது செயலுக்கு போலீசாரிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். அவர் மன்னிப்பு கேட்ட வீடியோவை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், சமூக வலைதளங்களில் லைக்குகளுக்காகவும் ஃபாலோயர்களை அதிகரிப்பதற்காகவும் தேசிய தலைவர்கள் மற்றும் சமூகச் சின்னங்களை அவமதிக்கும் வகையில் பதிவுகளை வெளியிட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.



