
நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீட் தேர்வு முறைகேடுகள், தொடர்ச்சியான வினாத்தாள் கசிவு உள்ளிட்டவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும், நாடு முழுவதும் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தைக் கண்டித்தும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
இந்த போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் மூத்த தலைவர்கள் நேரில் சென்று ஆதரவுத் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவரை டெல்லி காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப்படையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், போராட்டத்தின் 22-வது நாளான இன்று (ஜூலை 20) நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடைபெறும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்திருந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி காவல் துறையினர் மற்றும் துணை ராணுவப்படையினர் நாடாளுமன்றம் செல்லும் பாதை மற்றும் ஜந்தர் மந்தரில் குவிக்கப்பட்டிருந்தனர். அத்துடன், ஆங்காங்கே தடுப்புகளும் அமைக்கப்பட்டு கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருந்தனர். அதேபோல், பேரணியில் கலந்து கொள்பவர்களை தடுக்கும் வகையில் டெல்லியில் உள்ள முக்கிய மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
இந்த சூழலில், தடையை மீறி நாடாளுமன்ற நோக்கி பேரணியாக செல்ல முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் இளைஞர்கள் மீது துணை ராணுவப் படையினர் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும்,. டெல்லி ஜந்தர் மந்தரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்லியில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இளைஞர் ஒருவரை துணை ராணுவப் படையினர் சரமாரியாக லத்தியால் அடித்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் தலைநகர் டெல்லியில் அசாதாரண சூழல் நிலவுகிறது.



