
கொடைக்கானலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏரி சாலையில் சைக்கிள் சவாரி செய்தார்.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் முடிந்த நிலையில், கடந்த 25-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்றார். அங்கு பம்பார்புரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கியுள்ளார்.
இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 28), கொடைக்கானல் ஏரி சாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 கி.மீ நடைபயணம் மேற்கொண்டார். இதன் பின் திடீரென சைக்கிளில் ஏறி ஏரி சாலை முழுவதும் சுற்றி வந்தார். முதலமைச்சர் திடீரென சைக்கிள் ஓட்டிச் சென்றதால், பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். அத்துடன் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ஃபி எடுத்தனர். முதலமைச்சரை பின்தொடர்ந்து ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி மேற்கொண்டனர்.



