மதுரை குலுங்கியது… சித்திரைத் தேரோட்ட திருவிழா கோலாகலம்

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் மீனாட்சியும் – சொக்கநாதரும் வீதியுலா வந்தனர். ஏப்ரல் 26-ம் தேதி மதுரையின் அரசியாக மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் சூட்டப்பட்டு,
மறுநாள் திக் விஜயமும், நேற்று மீனாட்சி – சொக்கநாதர் திருக்கல்யாணமும் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து இன்று (ஏப்ரல் 29) காலை 5 மணி முதல் 5:30 மணிக்குள் அம்மனும் சுவாமியும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். சரியாக பூஜைகள் முடித்து 6:30 மணி அளவில் தேர் புறப்பட்டது. பெரிய தேரில் சுந்தரேசுவரர் – பிரியாவிடையும், சிறிய தேரில் மீனாட்சியும் வலம் வருகின்றனர். இரண்டு தேர்களும் ஒன்றன் பின் ஒன்றாக வலம் வரத் துவங்கியுள்ள நிலையில், நான்கு மாசி வீதிகளையும் கடந்து இறுதியாக தேரடிக்கு பிற்பகல் 12.30 மணிக்கு நிலைக்கு வந்து சேரும். தேரின் முன்பாக ஒயிலாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை நடத்தியபடி கலைஞர்கள் செல்கின்றனர். இளைஞர்கள், பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் இரண்டு தேர்களையும் வடம் பிடித்து இழுத்தனர்.

சித்திரைத் தேரோட்ட விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். இதனை முன்னிட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை 7 மணியளவில் சப்தாவர்ணச்சப்பரத்தில் அம்மனும், சுவாமியும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *