
நாம் தற்பொழுது இயைபுத் தொடை குறித்துப் பார்த்துவருகிறோம். ஓரடிக்கும் மற்றொரு அடிக்கும் அமைகின்ற இயைபு அடி இயைபு எனப்படும். அதை நாம் விரிவாகப் பார்த்துவிட்டோம். சீர் இயைபு என ஒன்று இருக்கிறது. அது ஏழு விகற்பங்களைக் கொண்டிருக்கிறது. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். இயைபுத் தொடையைப் பொருத்தவரை அளவடியில் உள்ள சீர்களைத் தலைகீழாக எண்ண வேண்டும். முதற்சீர் என்பதை நான்காம் சீராகவும் இரண்டாம் சீர் என்பதை மூன்றாம் சீராகவும் மூன்றாம் சீர் என்பதை இரண்டாம் சீராகவும் நான்காம் சீர் என்பதை முதற்சீராகவும் பாவிக்க வேண்டும்.
1.இணை இயைபு(4 3 சீர்கள்)
இறுதி எழுத்துகள் ஒன்றி வருவதையே நாம் இயைபு என்கிறோம். முதல் இண்டு சீர்களில் இயைபு அமைவது இணை இயைபு ஆகும்.
(உ-ம்)
ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு
நின்னுநின்னு பொதுவா நெனச்சத மெதுவா
ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு
(கவிஞர் வாலி)
இப்பாடலில் 4 மற்றும் 3-ம் சீர்களில் “சொல்லு சொல்லு” என்று வந்த சொல்லே வந்து இயைபு பெற்றுள்ளது.
2.பொழிப்பு இயைபு (4 2சீர்கள்)
மேலே சொல்லப்பட்ட அதே பாடலின் இரண்டாவது அடியிலுள்ள 4வது சீர் “மெதுவா” என்றும் 2வது சீர் “பொதுவா” என்றும் இறுதி எழுத்துகள் ஒன்றி வந்து இயைபு பெற்றுள்ளன.
3.ஒரூஉ இயைபு (4 1 சீர்கள்)
நல்லவன் எனக்கு நானே நல்லவன்
சொல்லிலும் செயலிலும் நல்லவன்
(கவியரசு கண்ணதாசன்)
இப்பாடலில் நான்காம் சீரிலும் முதற்சீரிலும் இயைபு அமைந்திருக்கிறது.
4.கூழை இயைபு (4 3 2 சீர்கள்)
கொடுத்துப் பார் பார் பார்
உண்மை அன்பை
நினைத்துப் பார் பார் பார்
அதன் தெம்பை
(மருதகாசி)
நான்காம் சீர் முதல் இரண்டாம் சீர்வரை பார் என்ற வார்த்தை இயைபுத் தொடையாக வந்திருக்கிறது.
5.மேற்கதுவாய் இயைபு(4 2 1 சீர்கள்)
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா
(கவியரசு கண்ணதாசன்)
இப்பாடலில் உள்ள 4 2 மற்றும் 1 ஆம் சீர்கள் மா என்ற எழுத்தில் முடிந்து இயைபு பெற்று வந்துள்ளன
6..கீழ்க்கதுவாய் இயைபு(4 3 1 சீர்கள்)
பல்லே தவளம் பாலே சொல்லே
இதில் இரண்டாம் சீரைத் தவிர மற்ற சீர்கள் அனைத்தும் லே என முடிந்து இயைபு பெற்று வந்துள்ளன.
7.முற்று இயைபு (4 3 2 1 சீர்கள்)
(உ-ம்)
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
(திருவாசகம்)
இதில் நான்கு சீர்களும் கி என்று முடிந்து இயைபு பெற்றுள்ளன. இயைபுத் தொடை இத்துடன் முற்றிற்று.
அளபெடைத் தொடை
மெய்யெழுத்துக்களும் உயிரெழுத்துக்களும் தமக்குரிய மாத்திரைக்கு அதிகமாக அளவெடுத்து ஒலிப்பபதே அளபெடை எனப்படும்.
(எ-கா)
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்
(திருக்குறள்- 653)
பாஅல் புளிப்பினும் பகலிருளினும்
நாஅல் வேத நெறிதிரியினும்
திரியாச் சுற்றமொடு..
(புறநானூறு-2)
அளபெடைத் தொடை வைத்து இக்காலத்தில் யாரும் பாப் புனைவதில்லை. பெயரளவிற்கு இதைத் தெரிந்துகொண்டால் போதுமானது.
இரட்டைத் தொடை
ஓரடி முழுவதும் ஒரு சொல்லே திரும்பத் திரும்ப, ஒரு பொருளிலோ அல்லது வெவ்வேறு பொருட்களிலோ, வருமாறு பாப் புனைவது இரட்டைத் தொடை எனப்படும்.
(எ-கா)
வாழுமே வாழுமே வாழுமே வாழுமே
கூழேனு மீவார் குடி
மாயுமே மாயுமே மாயுமே மாயுமே
ஈயாதா ரீட்டுந் திரு
மேற்கண்ட இரண்டு பாடல்களிலும் உள்ள முதல் அடிகளை நோக்குக! அடி முழுக்க ஒரே சொல் வந்திருப்பது கண்கூடு.
அந்தாதித் தொடை
அடிதோறும் இறுதியில் வரும் எழுத்தையோ அசையையோ சீரையோ அல்லது அடியையோ அடுத்த அடிக்குத் தொடக்கமாக அமைத்துப் பாட்டு எழுதுவதை அந்தாதித் தொடை என்று அழைக்கிறோம்.
உலகுடன் விளக்கும் ஒளிதிகழ் அவிர்மதி
மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை
அறிவுசேர் உள்ளமொடு அருந்தவம் புரிந்து
துன்னிய மாந்தர தென்ப
பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே
(யாப்பருங்கல விருத்தியுரை)
மேலே சொல்லப்பட்ட விபரப்படி இப்பாடல் அமைந்திருப்பதை எளிதாகக் கண்டுணரலாம். கூடுதலாகச் சொல்ல வேண்டியது என்ன வென்றால் எந்த வார்த்தையில் பாடல் தொடங்குகிறதோ அதே வார்த்தையைக் கொண்டு இப்பாடல் முடிந்திருப்பதுதான். பாடலை அவ்வாறு அமைப்பதுதான் மரபு. இந்த ஒரு விதியை மட்டும் தளர்த்தி மிக மிக அருமையான இரண்டு அந்தாதித் தொடைப் பாடல்களைக் கொடுத்துள்ளார் கவியரசு கண்ணதாசன்.
முதற்பாடல்
வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்க்கணைகள்
மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால்
மடி இரண்டும் பஞ்சனைகள்
பஞ்சனையில் பள்ளி கொண்டால்
மனம் இரண்டும் தலைஅணைகள்
தலையணையில் முகம் புதைத்து
சரசமிடும் புதுக் கலைகள்
புதுக்கலைகள் பெறுவதற்கு
பூமாலை மணவினைகள்
மணவினைகள் யாருடனோ மாயவனின் விதிவகைகள்
விதிவகையை முடிவு செய்யும் வசந்தகால நீரலைகள்
ஒவ்வொரு வரியும் இரண்டிரண்டாக மடித்து எழுதப்பட்டுள்ளது. அப்படிப் பார்க்கையில் முதலடி நீரலைகள் என்று முடிகிறது. அடுத்த அடி நீரலைகள் என்றே தொடங்குகிறது. அனைத்து அடிகளும் அவ்வாறே வந்திருப்பதைப் பாடலைப் பார்த்துத் தெரிந்துகொள்க!
இரண்டாவது பாடல்
ஆடி வெள்ளி தேடி உன்னை
நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன்
காவிரியின் ஓரம்
ஓரக் கண்ணில் ஊறவைத்த
தேன் கவிதைச் சாரம்
ஓசையின்றிப் கேட்குமது
ஆசை என்னும் வேதம்..
வேதம் சொல்லி மேளமிட்டு
மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று
வித்தை பல நாடும்
நாடும் உள்ளம் கூடும் எண்ணம்
பேசும் மொழி மெளனம்
ராகம் தன்னை மூடி வைத்த
வீணை அவள் சின்னம்
சின்னம் மிக்க அன்னக்கிளி
வண்ணச் சிலைக் கோலம்
என்னை அவள் பின்னிக் கொள்ள
என்று வரும் காலம்
காலம் இது காலம் என்று
காதல் தெய்வம் பாடும்
கங்கை நதி பொங்கும் – கடல்
சங்கமத்தில் கூடும்
மேற்கண்ட பாடலில் முதல் பத்தி ஓரம் என்று முடிய, அடுத்த பத்தி ஓரம் என்ற சொல்லிலேயே தொடங்குகிறது. தொடர்ந்துவரும் அனைத்துப் பத்திகளும் அவ்வாறே மிக அழகுற அமைந்துள்ளன.
செந்தொடை
மோனை, எதுகை போன்ற தொடைகளின்றி அசையும் சீரும் இசை கெடாமல் அமைத்து, இயற்கை அழகுடன் எழுதப்படும் பாடல்களை செந்தொடைப் பாடல்கள் என அழைக்கிறோம்.
நெருப்பி னன்ன செந்தலை யன்றில்
இறவி னன்ன கொடுவாய்ப் பேடையொடு
தடவின் ஓங்குசினைக் கட்சியிற் பிரிந்தோர்
கையற நரலு நள்ளென் யாமத்துப்
பெருந்தண் வாடையும் வாரார்
இஃதோ தோழிநங் காதலர் வரவே.
(குறுந்தொகை-160-மதுரை மருதன் இளநாகனார்)
இதில் எதுகை, மோனை, முரண், இயைபு, அளபெடை, இரட்டை மற்றும் அந்தாதி என்ற எந்தத் தொடையும் வரவில்லை. இருப்பினும் பாட்டு இயற்கை அழகுடன் செம்மையாக இருக்கிறது. தொடையேதும் இல்லாத நிலையையே நாம் செந்தொடை என்கிறோம். இப்படி எவ்விதத் தொடையுமின்றி நாம் இக்காலத்தில் எழுதுதலாகாது. ஏனெனில் புதுக் கவிதைகள், ஹைக்கூ கவிதைகள், நவீனக் கவிதைகள் என்று வந்துவிட்ட காலமிது.இப்படிப்பட்ட சூழ்நிலையில் மரபைக் காக்க வேண்டுமெனில் மரபு குன்றாத யிப்பிலக்கண விதிகளுக்குட்பட்டே கவிதை எழுத வேண்டும்.
யாப்பிலக்கணத்தில் உறுப்பியல் இத்துடன் முற்றும். அடுத்தா வாரம் தொடங்கி செய்யுலியலைப் பார்ப்போம்.
-மனோந்திரா (தொடரும்)
1)https://maduraiseithi.in/manondiras-grammar-series-begins/
2)https://maduraiseithi.in/manondiras-easy-grammar-series-2/
3)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-ease-3/
4)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-4/
5)https://maduraiseithi.in/manondiras-grammar-series-5/
6)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-6/



