
டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் சார்பில் கடந்த மாதம் (ஜூன்) 2-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தை நோக்கி கடந்த 20-ம் தேதி நடத்திய பேரணியில் போலீஸார் தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் அமைப்பினர், எதிர்க்கட்சியினர் ஆதரவு அளித்தனர். டெல்லியைத் தொடர்ந்து மும்பை, கொல்கத்தா, சென்னை உள்பட இந்தியா முழுவதும் போராட்டம் பரவியது. இதற்கிடையே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கும், மத்திய அரசுக்கும் இடையே நேற்று (ஜூலை 24) பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சார்பில் செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய அரசு சார்பில் மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் பங்கேற்றனர்.
அப்போது நீட் வினா தாள் கசிவிற்கு பொறுப்பேற்று மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது எந்த வழக்கும் பதிய கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். மேலும் இன்று (ஜூலை 25) மாலை வரை அதற்கான அவகாசத்தை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பிரதிநிதிகள் அளித்து இருந்தனர். இந்த நிலையில் மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், “கனத்த மனதுடன் இந்த முடிவை எடுத்துள்ளேன். கடந்த 10 நாட்களாக நாட்டில் நிலவி வரும் சூழல் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளேன். இந்தச் சூழலை தேச விரோத சக்திகள் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதே முதன்மை நோக்கம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவல் டெல்லி ஜந்தர் மந்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மத்தியில் கிடைத்ததும் மகிழ்ச்சி ஆராவாரம் கிளம்பியது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே உணர்ச்சி பெருக்குடன் முழக்கமிட்டார். இது மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி, ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று அவர் கூறினார். மேலும் எங்களது இரண்டு கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை அடுத்து டெல்லி மட்டுமின்றி சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி அரசின் வரலாற்றில் போராட்டங்களுக்கு பணிந்து மத்திய அமைச்சர் பதவி விலகுவது இதுவே முதல்முறை எனபது குறிப்பிடத்தக்கது.



