
எடப்பாடி பழனிசாமி மாநில நலனையும் பலி கொடுக்கத் துணிந்துவிட்டார் என்று சு.வெங்கடேசன் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ” நாளை நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படவுள்ள அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதா- 2026 நாம் அனைவரும் அஞ்சியதை விட மிகவும் ஆபத்தான அம்சங்களைக் கொண்டுள்ளது.
பிரதமர் மற்றும் அமைச்சர்களின் உறுதிமொழிக்கு மாறாக, ஒவ்வொரு மாநிலத்திற்குமான.தற்போதைய இடங்களின் விகிதாச்சாரம் பராமரிக்கப்படும் என்பதை உறுதிசெய்ய இம்மசோதாவில் ஒரு வரி கூட இல்லை. மக்கள் விரோத பாஜகவைத் தலையில் வைத்துத் தூக்கித் திரியும் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் 25-வது வாக்குறுதியில் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.’ தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டிற்கான தற்போதுள்ள விகிதாச்சார பிரதிநிதித்துவம் குறைந்துவிடாமல் இருக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்’..
தற்போதைய இடங்களின் விகிதாச்சாரம் பராமரிக்கப்படும் என்பதை உறுதிசெய்யாத இம்மசோதாவிற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி ஆவேச அறிக்கை ஒன்றை இந்நேரம் வெளியிட்டிருக்க வேண்டும். தங்களது மாநிலங்களவை உறுப்பினர்கள் இம்மசோதா நகலைக் கிழித்தெறிய இந்நேரம் உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படியெதுவும் நடந்ததாக தெரியவில்லை. அவரின் அமைதி நமக்கு உணர்த்துவது ஒன்றுதான். கட்சியைப் பாஜகவிடம் அடகுவைத்துச் சரணடைந்ததைப் போல இப்போது நம் மாநில நலனையும் பலி கொடுக்கத் துணிந்துவிட்டார் என்பதே அவரது அமைதிக்கான அர்த்தம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



