வெளியானது நீட் தேர்வு முடிவு… தமிழ்நாடு வாங்கிய ரேங்க் என்ன தெரியுமா?

நீட் மறு தேர்வில் 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் (UG) 2026 தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வு முகமை (NTA) நேற்று வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கான மருத்துவக் கலந்தாய்வு மற்றும் சேர்க்கை நடைமுறைகள் திட்டமிட்டபடி காலதாமதமின்றித் தொடங்குவதற்காக, இந்த முடிவுகள் உரிய நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில், 11 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்புகளுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

கடந்த ஜூன் 21-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில், 11.21 லட்சம் மாணவர்கள் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக, தேர்ச்சி பெற்றவர்களில் 58 சதவீதத்திற்கும் அதிகமானோர் மாணவிகள் ஆவர். அதாவது, தேர்வு எழுதிய மாணவிகளில் 56.8 சதவீதத்தினரும், மாணவர்களில் 55.1 சதவீதத்தினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தங்களது மதிப்பெண் அட்டைகளை neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பஞ்சாப்பைச் சேர்ந்த ஆர்யன் குப்தா மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த பான்ஷுல் பன்சால் ஆகிய இருவரும் 720-க்கு 715 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனர். 138 மாணவர்கள் 690-க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இவர்களில் 93 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்களது முதல் முயற்சியிலேயே இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர். 700-க்கும் மேல் 19 மாணவர்களும், 600-க்கும் மேல் 10,160 மாணவர்களும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

நாட்டின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களும் இத்தேர்வில் தகுதி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக உத்திரப் பிரதேசத்தில் இருந்து 1.7 லட்சம் மாணவர்களும், லட்சத்தீவில் இருந்து 43 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்தியாவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்கடபதி வேலாயுதம் 99.99915 சதவீத புள்ளிகளுடன் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவர் தேசிய அளவில் 12-வது இடத்தையும் பெற்றுள்ளார். மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுடர் என்ற மாணவன் தேசிய அளவில் 45 வது இடத்தையும், சபரி என்ற மாணவன் 59வது இடத்தையும், ஜெய் கிருஷ்ணா என்ற மாணவன் 75 வது இடத்தையும், சாம்விதா என்ற மாணவி 82 வது இடத்தையும், நவீதனா 88 வது இடத்தையும், ஜனனி ஸ்வேதா 112 வது இடத்தையும், ரோகித் மேத்யூ 115வது இடத்தையும், மற்றொரு ஜெய் கிருஷ்ணா என்ற மாணவன் 134வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், மருத்துவக் கலந்தாய்வு தொடர்பான தகவல்களுக்கு மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்களை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், போலி அழைப்புகள் மற்றும் மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம் என்றும் தேசிய தேர்வு முகமை எச்சரித்துள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *