
புதுமையான ஆட்சி தருவார் என்று பார்த்தால் புஷ்பா திரைப்பட பாணியில் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் திமுக கூட்டணி கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியது. இதன் அடிப்படையில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவைத் தொடர்ந்து மே 10-ம் தேதி சி.ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இதனையடுத்து 17வது சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. நேற்று இரண்டாவது நாள் கூட்டத்தொடரில் சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று ( மே 13) நடைபெற்று வருகிறது. நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “தவெக ஆட்சி அமைக்க வேண்டும் என பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்கவில்லை. தவெகவுக்கு 1.72 கோடி மக்கள் தான் வாக்களித்துள்ளனர். ஆனால், இந்த ஆட்சிக்கு எதிராக 3.21 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர்.
எனவே, பெரும்பாலான மக்கள் இந்த ஆட்சியை ஏற்றுக் கொள்ளவில்லை. திருப்பத்தூர் எம்எல்ஏ வாக்கெடுப்பில் பங்கேற்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் தவெகவுக்கு 106 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். எங்களது கூட்டணியில் வெற்றி பெற்றவர்களிடம் ஆதரவு பெற்றே இந்த ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.
2 தொகுதிகளில் முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றாலும், இன்னும் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கவில்லை. இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக ஆகியவை உங்களுக்கு ஆதரவு அளித்தாலும், எங்கள் கூட்டணியிலேயே இருப்பதாக அவர்களே கூறியுள்ளனர்.
பாஜக கூட்டணியில் இடம் பெற்ற ஒரு கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற ஒருவர் உங்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. அதில் ஒரு தரப்பினர் உங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் பிளவுபட்ட ஒரு தரப்பினர் வீட்டுக்கு புது ஷோபா செல்கிறது. தொடர்ந்து அங்கு முதலமைச்சர் செல்கிறார். புதுமையான ஆட்சி தருவார் என்று பார்த்தால் புஷ்பா திரைப்பட பாணியில் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது.
வாக்களித்த மக்கள் இந்த ஆட்சி மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். கூட்டணி கட்சிகளும் தற்போது பயந்து விட்டனர். இந்த அரசு எத்தனை நாளைக்கு நீடிக்கப் போகிறது என்று மக்கள் நினைக்கத் தொடங்கி விட்டனர். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் இந்த ஆட்சி நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தலைவரால் மற்றும் சிலர் என்று குறிப்படப்பட்ட கட்சியை சேர்ந்த சிலர் அமைச்சர்களாக பதவியேற்க இருப்பதாக தெரிகிறது.
இந்த அரசு நல்லாட்சித் தரும், தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர். கூவத்தூரையும் மிஞ்சும் வகையில் கூத்துகளை இந்த அரசு அடிக்கிறது. எங்களது முந்தைய நலத்திட்டங்களை இந்த அரசு தொடர வேண்டும். 15-ம் தேதி 1000 ரூபாய் வரும் என கோடிக்கணக்கான பெண்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள். காத்திருக்கும் அனைவரையும் நீண்ட நாள் காத்திருக்க வைக்க வேண்டாம்.
ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் உள்ளிட்ட வாக்குறுதிகளில் ஒரு சிலவற்றையாவது இந்த அரசு நிறைவேறும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் உங்களது முதல் கையெழுத்தில் அவை எதுவும் இடம் பெறவில்லை. 2021-ல் கொரோனா காலகட்டத்தில் பதவியேற்ற திமுக அரசு, விடியல் பயணம், குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் நிவாரணம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளில் எங்கள் தலைவர் கையெழுத்திட்டார். பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்கிறது” என்று அறிவித்தார். இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.



