
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், 5 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் போக்குவரத்து வசதியும் பல இடங்களில் முடங்கியுள்ளது.
இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. அத்துடன் வங்க கடலில் ஒடிசாவை ஒட்டிய மேற்கு வங்கக் கடலோரத்தில் வலு பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாட்டின் மத்திய மற்றும் மேற்கு மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது.
இதன் காரணமாக மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொட்டி தீர்த்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று 5 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, மற்றும் ஒடிசா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அதீத கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.
இதேபோல் கிழக்கு ராஜஸ்தான், கிழக்கு மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா, கர்நாடகாவின் உள் மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை பொருத்தவரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும். மேலும் ஜூலை 7-ம் தேதி வரை குஜராத், கோவா, கொங்கன் பகுதிகளில் அதீத கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை தொடரும்” என்று தெரிவித்துள்ளது.



