
கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவனாக எனது அன்பு வேண்டுகோள் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ஏ.எம்.ஷாஜகான் ஆக்யோர் இன்று (மே 22) அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். ஷாஜகான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும், வன்னி அரசு சமூக நீதித்துறை அமைச்சராக அதிகாரப்பூர்வமாக பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் சேர்ந்தது குறித்து சமூக ஊடகங்களில் திமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். திமுக கட்சி நிர்வாகிகள் சிலர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவுகள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம்” என்று கட்சித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. வன்னி அரசு அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள். தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தவொரு கட்சிக்கும் உண்டு. எனவே, கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவனாக எனது அன்பு வேண்டுகோள்.
பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம்; அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்..



