மதுரையில் ஒரு போபால்?… உரக் கம்பெனியால் உயிருக்கு ஆபத்து என பதறும் மக்கள்

மதுரையில் உள்ள உரம், பூச்சிக்கொல்லி கம்பெனியில் இருந்து வெளியேறும் நச்சுக்காற்றுவால் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 1984 டிசம்பர் 3-ம் தேதியை அவ்வளவு எளிதாக யாரும் மறந்து விட முடியாது. மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் உள்ள
யூனியன் கார்பைடு இந்தியா லிமிடட் என்ற பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வாயுக்கசிவினால் 5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர்.பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும் போபால் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.

போபாலில் உள்ள தொழிற்சாலை போல மதுரையில் உள்ள தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சு வாயுவால் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. மதுரை மந்திக்குளம் பஸ்நிறுத்தத்தில் நத்தம் மெயின் ரோட்டில் உள்ள சயின்டிபிக் அக்ரிகல்சர் லாபரட்டரி பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனி இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் உரம், பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த கம்பெனியில் இருந்து வெளியேறும் நச்சுக்காற்றால் சுற்றுப்புற கிராமங்கள் அதிக அளவு பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

மந்திக்குளம், கருவனூர், பெத்தாம்பட்டி, உசிலம்பட்டி, பாறைப்பட்டி உள்ளிட்ட அருகில் உள்ள கிராம மக்கள், இந்த கம்பெனி நச்சுக்காற்றை சுவாசிப்பதால் மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர். பலர் மருத்துவ சிகிச்சை எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

அதிகாலை நேரம் மற்றும் மாலை நேரங்களில் இருந்து இந்த கம்பெனியில் இருந்து வெளியேறும் நச்சுக்காற்றால் சுவாசிக்க முடியாத அளவு பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சக்தி வாய்ந்த கெமிக்கல்ஸ் பயன்படுத்துவதால், அவை காற்றில் பரவி பொதுமக்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். இந்த கம்பெனியால் அருகில் உள்ள விவசாய நிலங்கள், கால்நடைகள் மட்டுமின்றி சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கிராமமக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக மிகப்பெரிய தர்ணா போராட்டத்தை நடத்த உள்ளதாக பாதிக்கப்பட்ட கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *