
போர் புரிந்து ஈரானை கைப்பற்றினால்தான் தவெக அறிவித்த 6 சிலிண்டர்களை தரமுடியும் என்று விஜய்யை சீமான் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சிமான் காரைக்குடியில் போட்டியிட்டார். ஆனால், நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. ஒட்டுமொத்தமாக சுமார் 4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது.
இந்த நிலையில், சென்னை மறைமலைநகரில் மே 18 நினைவேந்தல் கூட்டத்தில் சீமான் பேசுகையில்,” உண்மைகளைப் பேசாதவர்களை மக்கள் கொண்டாடுகின்றனர். மக்களுக்காக உண்மைகளைப் பேசுபவர்களைத் தூக்கி எறிகின்றனர். எளிதில் கிடைக்கும் பொருள் எதற்கும் எப்போதுமே மதிப்பில்லை. அதிகாரம் என்பது மிகவும் வலிமையானது என்றாலும் அது யாருக்கும் நிலையானது அல்ல. 7 அடி நீளம் தாண்ட 70 அடி பின்னே போக வேண்டும். வாழ்க்கையில் பெரிய வெற்றிகளைப் பெற சில நேரங்களில் நாம் பின்வாங்கிப் பொறுமையாக இருக்க வேண்டும்.
நம் கட்சியின் கொள்கைகளை புரிந்து கொண்டு எதிர்காலத்தில் மக்கள் நம்மை தேடி தேடி வருவர். தோல்வி என்பது நமக்கு இல்லை. வெற்றி ஒன்றே நமக்கு எல்லை. தேர்தல் தோல்வியை கண்டு நாம் தமிழர் கட்சியினர் துவண்டு போக மாட்டார்கள். மக்கள் அறிவுத் தலைமையை நோக்கிச் செல்லாமல் கவர்ச்சியின் பின்னால் சென்று விட்டனர். தமிழ்நாட்டில் ரூ.10 லட்சம் கோடி கடன் இருப்பது ஆட்சிக்கு வந்த பிறகு தான் விஜய்க்கு தெரியுமா? ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் தருவேன் என்று விஜய் வாக்குறுதி அளித்துள்ளார். போர் புரிந்து ஈரானை கைப்பற்றினால்தான் தவெக அறிவித்த 6 சிலிண்டர்களை தரமுடியும்” என்றார்.



