
கர்நாடகா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக சித்தராமையா அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த 2023-ம் ஆண்டு சித்தராமையா முதலமைச்சராக பதவி வகித்து வந்தார். துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் செயல்பட்டு வந்தார். ஐந்தாண்டு பதவிகளை இரண்டரை ஆண்டுகள் கழித்து டி.கே.சிவக்குமார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று பேசப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது சித்தராமையா முதலமைச்சராகி மூன்று ஆண்டுகளாகி விட்டது.
எனவே, டி.கே.சிவக்குமார் முதலமைச்சராக வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்த துவங்கினர். இந்த பிரச்னையில் தலைமை தான் முடிவெடுக்கும் என்று சித்தராமையா கூறி வந்தார். இந்த நியைல், டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கர்நாடகா நிலைமை குறித்து கடந்த ஒரு வாரமாக விவாதம் நடைபெற்றது.
நேற்று முன்தினம் மாலை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சித்தராமையா முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவார் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா வீட்டில் இன்று (மே 28) காலை விருந்து நடைபெற்றது.இதில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்குப் பிறகு தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக சித்தராமையா அறிவித்தார். இதனையடுத்து டி.கே.சிவக்குமார் முதலமைச்சராக நாளை (மே 29) பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. முதலமைச்சர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையாவிற்கு மாநிலங்களவை சீட்டும், அவரது மகனுக்கு கர்நாடகா மாநில ஆட்சியில் முக்கிய பதவியும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



