
தெலங்கானாவில் கண்டெய்னர் லாரி மீது தனியார் பேருந்து மோதியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தெலங்கானா மாநிலம், சூர்யாபேட்டை மாவட்டத்தில் கோடாட் ஊரக காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று (ஆக.26) இந்த விபத்து ஏற்பட்டது. ஹைதராபாத்திலிருந்து விஜயவாடா நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, தெலங்கானா மாநிலம், சூர்யாபேட்டை மாவட்டத்தில் உள்ள துர்காபுரம் அருகே சென்ற போது கண்டெய்னர் லாரியின் மீது பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது.
அந்த பேருந்தில் 43 பேர் பயணம் செய்த நிலையில், விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் காயமடைந்த பயணிகளை மீட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அதிர்ச்சி தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்குத் தகுந்த மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு அவர் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



