
ராஜநாகம் படத்தில் ஸ்ரீகாந்த்,சுபா.
நண்பன் ஒருவன் காதலிக்கும் போது, அவனுக்கு துணை நிற்பது, அவனை, அவனது காதலை கிண்டல் செய்வதில் உள்ள மகிழ்ச்சி நிஜமாகவே காதலிக்கும் போது கூட கிடைக்காது என்பது உறுதி. என் போன்ற பரம சாதுக்களுக்கு காதல் தொடா்பாகக் கிடைக்கும் ஒரே அனுபவமும் இப்படி காதலிக்கும் நண்பனை கேலி செய்து மகிழ்வது மட்டும்தான்.
நண்பனின் காதல்
அப்படித்தான் எங்களிடம் மூர்த்தி மாட்டினான். மூர்த்தியும், நர்ஸிங் படிப்பு படித்துக் கொண்டிருந்த மலரும் காதலிப்பது எல்லோருக்கும் தெரிந்த பிறகு டியூப் லைட்டான எனக்கு மிகவும் தாமதமாகத் தான் தெரிந்தது. மூர்த்தியின் அப்பா பிள்ளையார் கோயில் அர்ச்சகா். இயல்பாகவே மூர்த்தி துணை அர்ச்சகர். மலர் கிறிஸ்துவப் பெண். அவள் மிஷின் ஆஸ்பத்திரியில் நர்ஸுக்குப் படித்துக் கொண்டிருந்தாள். இவர்கள் விஷயம் எனக்குத் தெரியும் என்பதை மூர்த்திக்குத் தெரியப்படுத்த வேண்டுமே ! ஒரு நாள் மூர்த்தி எதிரில் வரும் போது நான் தேவன் வேதமும், கண்ணன் கீதையும்… என்று பாடினேன்.
தேவலோக இனிமை
ஐயர் பையன் – கிறிஸ்துவப் பெண் காதலுக்கான அப்போதைய டிரெண்டிங் பாட்டு அலைகள் ஓய்வதில்லையின் காதல் ஓவியம் என்றாலும், பாடல் வரிகளில் தேவன் வேதமும், கண்ணன் கீதையும் பாட்டு போல் நேரடியாக இந்தக் கலப்புக் காதலை அது தெரிவிக்காது. மற்றொரு காரணம் தேவன் வேதமும் பாடலின் அசாதாரணமான தேவலோகத்து இனிமை.
சுசீலாம்மா
தேவன் ஏசுவின் வேதம் …
என்று ஆரம்பிக்கும் போதே ஓவர்லாப்பாக பரலோகத்தில் இருக்கின்ற எங்கள் பிதாவே என்று ஒலிக்கும்.
எஸ்பிபி
கண்ணன் சொல்லிய கீதை….
என்று தொகையறா பாடும் போது
ஓவர்லாப்பில்
பரித்ராணாய சாதூனாம் என்று கீதையின் வரிகள். அந்த இடததில் நாயகனின் பூணூலும், நாயகியின் சிலுவை மாட்டிய சங்கிலியும் கோர்த்துக் கொள்ளும் அந்தக் கால டைரக்டர் டச் !
பாடலின் வரிகளும் அற்புதம்.
சுசீலாம்மா திஸ்ரகதியில்,
நெஞ்சோடும் நினைவோடும்
நீங்காமல் நின்றாடும்
சிலுவை நீ.. யன்றோ…. என்றதும்
எஸ்பிபி
வேலன் கொஞ்சும் வேலின் வண்ணம்
கண்ணே உன் கண்ணில் உண்டோ…. என்பார்.
சுசீலாம்மா
தட்டுங்கள் கேளுங்கள் உண்டு என்றால்
எஸ்பிபி
தர்மங்கள் எங்கேயும் உண்டு என்று பதில் தருவார்.
இருவரும் மாறி மாறி
ஒரு பாதையில் இங்கு சங்கமம் ஒரு பாதையில் இங்கு சங்கமம்…என்று கடைசி வரியை அவ்வளவு அற்பதமாக ஓவர்லாப்பாக பாடிக் கொண்டே இருப்பார்கள். வி.குமார் எப்படித் தான் இந்த மெட்டை கற்பனை செய்து இசையமைத்தாரோ என்று நான் எண்ணி எண்ணி வியந்த பாடல்.

ராஜநாகம் படத்தில் ஸ்ரீகாந்த்.
ஜனதா கட்சி
இந்த பாட்டில் ஸ்ரீகாந்தை விட உடன் நடித்த சுபா என்னை அதிகம் கவர்ந்தது வேறு விஷயம் ! அவர் நடிகர் எஸ்.வி.சுப்பையாவின் மகள் என்று கூட அப்போது யாரோ சொன்னதாக நினைவு. படத்திலேயே இதுதான் அருமையான பாடல் என்றாலும், மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான் என்று டிஎம்எஸ்அடிவயிற்றிலிருந்து பாடிய பாட்டு தான் எங்கள் ஏரியாவில் பல வருடங்களுக்கு குழாய்களில் அலறியது. நடிகர் ஸ்ரீகாந்த் அப்போது ஜனதா கட்சி ஆதரவாளராக இருந்ததால், ஜனதா கட்சி கூட்டங்களுக்கு நாள் முழுக்க குழாயில் இந்தப் பாட்டுதான். ஸ்ரீகாந்த் எங்கள் தெருவில் ஜனதா கட்சி மன்றத்தை திறந்து வைக்க வந்த போது, ஜனநாயகம் காத்திட வா என் தோழா, ஜனதா அழைக்கின்றது… பாட்டையும், மாணவன் நினைத்தால் பாட்டையும் மாறி மாறி போட்டு ஒருவழி செய்ததில், தேவன் வேதமும் பாட்டு காணாமல் போனது !
அன்று, நான் இதைப் பாடியதும், மூர்த்தி “உங்கிட்ட சொல்லிட்டாய்ங்களா?“ என்றான் சிரித்தபடி. பின்னா் அவனைப் பார்க்கும் போதெல்லாம், சமயங்களில் மலரைப் பார்க்கும் போதெல்லாம் இந்தப் பாட்டைப் பாடி நாங்கள் இம்சை செய்து மகிழ்ந்தோம்.எல்லா மாணவப் பருவக் காதல்களைப் போலவே மூர்த்தி – மலர் காதலும் காலப் போக்கில் கருகிப் போனது !
சுடர் சேர்ந்திசைக்குழு
பின்னாளில் எங்கள் சுடர் கலைக்குழுவில் நாங்கள் சேர்ந்திசையில், We Shall Overcome பாடலைப் பாடும் போது, பாடலை முடிக்கும் போது பெண் தோழர்கள் We Shall Overcome என்ற வரியைப் பாடும் போது, நான்கு இடம் தள்ளி நாங்கள் ஆண் தோழர்கள் அதே We Shall Overcome வரியை ஓவர்லாப் பாடுவதற்குப் பட்ட திண்டாட்டம், வாங்கிய திட்டுகளின் போது கூட, ஒரு பாதையில் இங்கு சங்கமம்… ஓவர்லாப் தான் நினைவிற்கு வந்தது.
மீண்டும் வந்த மலர்
நாற்பதாண்டு ஓடிவிட்டது. எங்கள் கோஷ்டியின் சேகர் முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சையில் நேர்ந்த ஒரு பிசகு காரணமாக படுத்த படுக்கையாகி விட்டான். எழுந்து உட்கார முடியாத வேதனை. படுத்தே இருப்பதால் முதுகில் புண்கள். அவனைப் பார்க்கச் சென்ற போது, அவனுக்கு முதுகு புண்களை சுத்தம் செய்து மருந்திட வந்திருந்த எங்கள் வயதையொத்த தடித்த நர்ஸ், எங்கோ பார்த்த முகமாக இருந்தார்.
மனத்திரையில் நான் அதுவரை சந்தித்திருந்த அத்தனை நர்ஸ்களின் முகத்தையும் ஓட்டி யார் என்று கண்டுபிடித்து விட்டேன். உலகம் நிச்சயமாக உருண்டைதான். காலம் சிலரின் முகத்தை மாற்றாது போலும் ! நாற்பதாண்டுகளுக்கு முன் எங்கள் கோஷ்டியின் மூர்த்தி காதலித்த மலர் ! வாடாமல் புஷ்டியாக இருக்கும் மலர் ! அவருக்கு என்னை, சேகரை அடையாளம் தெரிந்ததா? இல்லையா? அவர் முகத்திலிருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் கடமையே கண்ணாயினாராக இருந்தார்.
வேலையை முடித்துக் கொண்டு அவர் கிளம்பினார். அவர் போய்விட்டார் என்பதை உறுதி செய்து கொண்டு, நான் கிழிந்த துணியாய் கிடந்த சேகரிடம் “சேகரு, இந்தம்மா யாருன்னு தெரியுதா?“ என்கிறேன். சேகர், பலவீனமான குரலில், “ஒரு பாதையில் இங்கு சங்கமம்,“ என்று மேலேயும். கீழேயுமாக, அந்த வரியின் இரண்டு சங்கதிகளையும் சிரமப்பட்டுப் பாடிப் புன்னகைக்கிறான்.
எனக்கு காப்பி எடுத்துக் கொண்டு உள்ளேயிருந்து வந்த சேகரின் மனைவி, “உங்களப் பாத்தா தா அவர் முகத்துல சிரிப்பே வருது,“ என்றார் வலிந்து வரவழைத்துக் கொண்ட சிரிப்புடன்.
எனக்குத் தான் அழுகையாக வந்தது.
– ச.சுப்பாராவ் (தொடரும்)
1)https://maduraiseithi.in/s-subbarao-writes-ninaive-sangeetham1/
2)https://maduraiseithi.in/ninine-sangeetham-2-written-by-s-subbarao/
3)https://maduraiseithi.in/s-subbarao-written-by-ninaive-sangeetham-3/
4)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-4/




அழ வச்சிட்டீங்க…
நன்றி..
Heart touching love story.
பாரதிராஜா அவர்களிடம் இந்த கதையை தெரிவித்தால் *அலைகள் ஓய்வதில்லை & முதல் மரியாதை* இரண்டையும் கலந்த பார்ட் – 2 படமாக எடுத்து விடுவார்…
இளையராஜா, வைரமுத்து காம்பினேஷனும் சேர்ந்தால் இன்னும் கூடுதல் மகிழ்ச்சி…
அவ்வளவு காதலும், சோகமும் வழிகிறது…❤️
நன்றி
வி குமார் அவர்களின் சிறந்த பாடல்களின் வரிசையில் என்றும் நிலைத்து நிற்கிறது. பாடலின் நுட்பங்களை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். ரசித்த மெல்லிய நுட்பங்களை எழுத்தில் கொண்டு வரும்போது எப்படி … என்று எத்தனை சிரமப்பட்டு இருப்பீர்கள் என்று புரிந்து கொள்கிறேன். இன்னொரு சுவாரஸ்யமான தகவல் பரலோகத்தில் இருக்கின்ற பிதாவே என்ற குரலுக்கு சொந்தக்காரர் நடிகர் பிரசாந்தின் அப்பா தியாகராஜன்!
இக்பால்
நடிகர் தியாகராஜன் பற்றி ஒரு புதிய தகவல் உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி தோழர்..
இந்த தொடர் மிகவும் அருமை