காவிரி விவகாரம்… கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

காவிரி விவகாரம் தொடர்பாக மேலாண்மை ஆணைய உத்தரவை கர்நாடக அரசு பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு, திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத்த தலைமையிலான அமர்வில் இன்று (ஆகஸ்ட் 17) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜராகி, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு எப்போதும் செயல்படுத்துவதே கிடையாது என்றும், தற்போதும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக செயல்படுத்தாமல் நீரை திறக்காமல் வைத்திருக்கிறது என்றார்.

மேலும் இதனால் தமிழகம் கடுமையாக பாதிப்படைகிறது. தற்போது கர்நாடகா அணைகளில் 76 சதவீத நீர் இருப்பு இருந்தும் நீரை திறக்க மறுத்து வருகிறார்கள். மேலும் தற்போது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வினாடிக்கு 12000 கன அடி நீர்வீதம் திறக்க உத்தரவிட்டும் அதைக் கூட கர்நாடகம் செயல்படுத்தவில்லை. என்று வாதிட்டார். அதற்கு கர்நாடக அரசு வழக்கறிஞர் ஷ்யாம் திவான் வாதிடுகையில், இந்த முறை கடுமையான வறட்சி நிலவிய ஆண்டு. காவிரி ஒழுங்காற்று குழு கொடுத்த பரிந்துரை அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் கொடுத்த உத்தரவின் அம்சங்கள் அத்தனையும் பின்பற்றப்பட்டது முதலில் 3500 கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்கள். ஆனால் அதைவிட அதிகமான தண்ணீர் திறந்து விட்டதாக வாதிட்டார்

இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அந்த சமயத்தில் அதிக மழை பெய்ததால் உபரி நீர் மட்டுமே தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. அதற்கு முன்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கொடுத்த எந்த ஒரு உத்தரவையும் கர்நாடகம் செயல்படுத்தவில்லை என்றார். அப்போது உங்கள் அணைகளில் அத்தனை நீரையும் சேமிக்க முடியவில்லை என்பதால் நீங்கள் தற்போது தண்ணீரை திறந்து விட்டிருக்கிறீர்கள் என்று கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞரை நோக்கி கேள்வி எழுப்பினர்.அதற்கு, நாங்கள் முடிந்தவரை தண்ணீரை திறந்து விட தான் முயற்சிக்கிறோம். அதற்காக தான் இந்த புதிய அணையை கட்ட முயற்சிக்கிறோம் ஆனால் இவர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்று கர்நாடகா தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இந்த விவாதத்திற்குப் பின்,“ கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அரசு தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கையை கொடுத்திருக்கிறார்கள் இதை நாங்கள் ஆய்வு செய்ய விரும்புகிறோம். எனவே ஒரு வார காலத்திற்குப் பிறகு இந்த வழக்கை ஒத்தி வைக்கிறோம். இந்த ஒரு வார காலத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் என்ன உத்தரவை பிறப்பித்ததோ அதை கடைபிடிக்க வேண்டும் ”என உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *